மார்கழி மாத பிறப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.

Update: 2024-12-17 01:23 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் கடந்த 13-ந் தேதி மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 14-ந் தேதி மாலை முதல் நேற்று முன்தினம் மாலை வரை பவுர்ணமி என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 13-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சமீப நாட்களாக அய்யப்ப பக்தர்களும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். வந்தவாசி ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் வரிசையாக அமர்ந்து ஆண்டாள் திருப்பாவை பாடினர்.

மேலும் ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க ரங்கநாதருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்