கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா
பக்தர்கள் போட்டி போட்டு தங்களது வீடுகளுக்கு புனித மண் எடுத்துச் சென்றனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அமைந்துள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு கற்குவேல் அய்யனாருக்கு அபிஷேக பால் குடங்கள் எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து 7 மணிக்கு பேச்சியம்மன் உற்சவர் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. 9 மணிக்கு பூர்ண பொற்கலை சமேத கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 9.45 மணிக்கு கற்குவேல் அய்யனார், பேச்சியம்மனுக்கு கோவில் எல்லையில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன.
மதியம் 12 மணிக்கு கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலையில் கோவில் பின்புறம் உள்ள தேரியில் திரளான பக்தர்கள் முன்னிலையில் கள்ளர் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வீடுகளுக்கு புனித மண் எடுத்துச் சென்றனர்.