மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா: தருமிக்கு சிவபெருமான் பொற்கிழி வழங்கிய லீலை
தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் காட்சி அளித்தனர்.;
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று முதல் கடந்த 4-ம் தேதி வரை (செப்டம்பர் 4) காலை மற்றும் இரவில் சுவாமி சந்திரசேகர் உற்சவ புறப்பாடு நடைபெற்றது.
அதன்பின்னர் திருவிளையாடல் லீலைகள் நடத்தப்படுகின்றன. 5-ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 6-ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய திருவிளையாடலும், 7-ம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும் நடைபெற்றது.
நேற்று (8-ம் தேதி) தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடல் லீலை நடந்தது. தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் காட்சி அளித்தனர். பின்னர் இரவு தங்கச்சப்பர வாகனத்தில் சுந்தரேசுவரர் சுவாமியும், யானை வாகனத்தில் அம்மனும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.
இன்று (9-ம் தேதி) உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், நாளை (10-ம் தேதி) பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடக்கிறது.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional