காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2024-08-29 09:21 GMT

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. ஓங்கி உயர்ந்த உலகளந்த பெருமாளாக மகாவிஷ்ணு காட்சியளிக்கும், இத்திருக்கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, உலகளந்த பெருமாள் சன்னதி, ஆரண வல்லித் தாயார் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணங்கள் தீட்டப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டு, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன.

இந்த திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நேற்று காலையில் யாக சாலை பூஜைகள் முடிந்து, மேளதாளங்கள் முழங்க, கோவில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்து, ராஜகோபுரம், சன்னதி கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்