வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவை காண குவியும் பக்தர்கள்

செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறும் பெரிய தேர் பவனியில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

Update: 2024-09-01 07:15 GMT

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

கீழை நாடுகளின் "லூர்து நகர்" என்ற பெருமையுடன் வேளாங்கண்ணி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும்.

வங்க கடலோரத்தில் இந்த பேராலயம் அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து மாதாவை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த பேராலயத்தில் ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். 7-ம் தேதி நடைபெறும் பெரிய தேர் பவனியில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டுக்கான பெருவிழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். பக்தர்கள் பாத யாத்திரையாக ஆலயம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி 7.9.2024 சனிக்கிழமை அன்று நடைபெறும். 8.9.2024 அன்று அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்