ஆவணி மூலத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் நாளை மதுரைக்கு புறப்பாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடைபெற்று வருகிறது.;
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந் தேதி பிட்டுத் தோப்பில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடக்கிறது. இதில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் எழுந்தருளுவது விசேஷமாகும்.
அதன்படி நாளை(வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாண்டிய மன்னனாக முருகப்பெருமான் புறப்பட்டு வருகிறார். திருப்பரங்குன்றம், பசுமலை, பழங்காநத்தம் வழியாக மதுரைக்கு வருகை தரும் முருகப்பெருமானை வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்று வழிபடுகிறார்கள்.
பிட்டு தோப்பில் 13-ந் தேதி நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலில் முருகப்பெருமான் பாண்டிய மன்னனாக பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வருகிற 17-ந்தேதி மதியம் வரை மதுரையில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இதை தொடர்ந்து அன்று மாலை 4 மணிக்கு மேல் மதுரையில் இருந்து மீண்டும் திருப்பரங்குன்றத்திற்கு பூப்பல்லக்கில் முருகப்பெருமான் புறப்பட்டு வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.