நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை என 2 வேளையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றத்திற்காக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் கொடி பட்டம் ஊர்லவமாக எடுத்து வரப்பட்டு, கொடி மரம் அருகே கொண்டு வரப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க அதில் கொடியேற்றப்பட்டது. அதன்பின்னர் கொடி மரத்திற்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆவணி மூலத் திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை, மாலை என 2 வேளையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நான்காம் நாள் இரவு சுவாமி நெல்லையப்பர் பஞ்சமூர்த்திகளுடன் திருவீதி உலா வருவார். விழாவின் 10-ம் நாளன்று கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.