மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பெண்கள் பொங்கல் வழிபாட்டில் பங்கேற்று பொங்கலிட்டனர்.

Update: 2024-08-25 06:14 GMT

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதல் நாளில் (ஆகஸ்டு 23) சுமங்கலி பூஜை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சுமங்கலி பூஜையில் கலந்துகொண்டனர். பூஜைக்கு பின்னர் அவர்களுக்கு சில்வர் தட்டு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வெற்றிலை பாக்கு, தேங்காய், அரவணை பாயாசம், சேலை, ஜாக்கெட் துணி மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.

2-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜமேளம், பகல் 11.30 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு நடந்தது. பொங்கல் வழிபாட்டிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். பக்தர்களின் வசதிக்காக தக்கலை, குமாரகோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், மதியம் 1 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

மூன்றாம் நாளான இன்று மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்க ரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் ஆவணி அசுவதி பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்