விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல்
அருகம்புல், விநாயகர் வழிபாட்டுக்கு மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகிறது.;
விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தமானது. விநாயகர் பூஜையில் நிச்சயம் அருகம்புல் இருக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவது மிகவும் சிறப்பான பலனை தரும் என்பது ஐதீகம். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது தொடர்பாக ஒரு புராண கதை உள்ளது.
எமதர்மனின் காமத்தீயில் இருந்து உருவான அனலாசுரன் தேவர்களையும், மக்களையும், முனிவர்களையும் தன்னுடைய வெப்பத்தால் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அவர் தன் படையுடன் சென்று அனலாகானுடன் போரிட்டு, அவனை வீழ்த்தினார். கீழே விழுந்த அவன் மீது, வருணன் கடும் மழை பொழிவித்தான். குளிர்ச்சியான சந்திரன், அனலாகரன் மீது தன்னுடைய குளிர் கதிர்களை பாய்ச்சினான்.
இதையடுத்து விநாயகப் பெருமான், அனலாசுரன் அருகில் சென்றார். அவனை சிறிய உருவமாக மாற்றிய விநாயகர், அவனை அப்படியே விழுங்கி விட்டார். அப்போது விநாயகரின் வயிற்றில் சூடான வெப்பம் ஏற்பட்டது. அது கடுமையான வெப்பத்தை உண்டாக்கி, விநாயகரை அவதிப்படுத்தியது. சிவபெருமான் தன்னுடைய குளிர்பாணங்களை விநாயகர் மீது எய்தார். ஆனாலும் அவரது வெப்பம் தணியவில்லை. கங்கை தன்னுடைய குளிர்ச்சியான நீரால், விநாயகரை நீராட்டினாள். அதுவும் பலன் அளிக்கவில்லை.
இறுதியாக மகரிஷிகளும் முனிவர்களும் அருகம்புல்லை கட்டு கட்டாக அமைத்து விநாயகருக்கு சாற்றினார்கள். அறுகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள். பின்பு இரண்டிரண்டு அறுகாக எடுத்து விநாயகரை நாமாவளி கூறி அர்ச்சனை செய்தார்கள். அதனால், அனலாசுரனை விழுங்கியதால் ஏற்பட்ட வெப்பம் தணிந்து விநாயகர் குளிர்ச்சி அடைந்தார். அன்றுமுதல் விநாயகருக்கு அருகம்புல் பிரியமானது. அத்துடன், வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் நிறைந்த அருகம்புல், விநாயகரின் முக்கியமான வழிபாட்டுப் பொருளாக மாறியது.
அருகம்புல் எல்லா காலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மழை இல்லாமல் கடுமையான கோடை நிலவினாலும்கூட அருகம்புல் வளரும். கடும் வெயிலில் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர, அழிந்து போகாது. சிறிதளவு மழை பெய்தாலும் அருகம்புல் பசுமையாக துளிர்விட்டு வளர்ந்து விடும்.
சாதாரண புல் போன்று காட்சி தரும் இந்த அருகம் புல், விநாயகர் வழிபாட்டுக்கு மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகிறது. அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த அருகம்புல், உடல் சூட்டை அகற்றும். நாள்பட்ட குடல் புண்களை ஆற்றும் சக்தி அருகம்புல்லுக்கு உண்டு. அருகம்புல் சாறு பருகினால் ரத்தம் தூய்மைகும், கண்பார்வையை தெளிவாக்கும்.