திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு
நிறைவு நாளின நேற்று இரவு கோவில் யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் மற்றும் பூர்ணாஹுதி நடைபெற்றது.;
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 நாட்களாக நடைபெற்ற பவித்ரோற்சவம் நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று காலை மூலவர் கோவிந்தராஜ சுவாமியை சுப்ரபாதம் பாடி துயிலெழுப்பி தோமால சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது.
தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி யாக சாலைக்கு எழுந்தருளினார். அங்கு வைதீக காரியக்கர்மங்கள் நடத்தப்பட்டன. காலை 10.30 மணியில் இருந்து 12.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் மற்றும் பல்வேறு பழச்சாறால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை உற்சவமூர்த்திகள் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதைத்தொடர்ந்து இரவு கோவில் யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் மற்றும் பூர்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சிகளில் கோவில் துணை செயல் அதிகாரி சாந்தி, உதவி செயல் அதிகாரி முனிகிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளர் மோகன் ராவ், கோவில் ஆய்வாளர் தனஞ்ஜெய மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.