சொந்த செலவில் நூலகம் அமைத்த ஆசிரியை

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் தொடங்கியபோது பலரும் எதிர்மறையாக பேசினார்கள். ஆனால் துணிந்து செயலில் இறங்கினேன். அதன் பயனாக நூலகத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்காத நபர்களும், இன்று தினமும் நூலகம் வந்து நாளேடுகளைப் படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Update: 2022-03-28 05:30 GMT
டலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை சசிகலா. இவர் பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து செயலாற்றி வருகிறார். கணவரின் உதவியுடன் தனது சொந்தப் பணத்தைக் கொண்டு நூலகம் அமைத்து, கிராம மக்களிடமும், மாணவர்களிடமும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்து வருகிறார். அவருடன் பேசியதிலிருந்து…

உங்களைப் பற்றி?
நான் பிறந்து வளர்ந்தது விருத்தாசலம். தற்போது சிதம்பரத்தில் வசிக்கிறேன். என் பெற்றோர் ராமலிங்கம்-சாந்தி. அறிவியலில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் முடித்திருக்கிறேன். கணவர் இலங்கேசன் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். எங்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.

ஜீவனுள்ள வகுப்பறையை எவ்வாறு உருவாக்குகிறீர்கள்?
எனது வகுப்பறையை முழு சுதந்திரம் பெற்ற சூழலுடன், உயிரோட்டம் பெற்றதாக மாற்றுவதற்கு அன்பின் அடிப்படையில் குழந்தைகளை வழிநடத்திச் செல்கிறேன். படைப்பாற்றல் மிகுந்த, சமூக அக்கறை நிரம்பிய, மனித நேயம் கொண்ட மாணவர்களை உருவாக்கத் திட்டமிடுகிறேன்.

அவர்களது அறிவை விசாலமாக்குவதற்கு களப்பயணங்கள், நாடகங்கள், விவாதங்கள், கதை கூறுதல், எழுதுதல் போன்றவற்றிற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருகிறேன். இதன் மூலம் கல்வி, திணிப்பாக இல்லாமல் மகிழ்ந்து கற்பதாக இருக்கிறது.

சொந்தச் செலவில் நூலகம் அமைத்தது பற்றி?
சிதம்பரம் அருகேயுள்ள எங்கள் ஊரான ‘தில்லை நாயகபுரம்’ கிராமத்தில், பெரும்பான்மையான மக்கள் சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கி உள்ளனர். கல்வியறிவு மட்டும்தான் அவர்களைக் கரை சேர்க்கும் ஆயுதம் என்பதால்,  நூலகம் அமைத்தேன். பொதுமக்களும், மாணவர்களும் நூலகத்தைச் சரியாக பயன்படுத்துவதற்கு வசதியாக, பெண் ஒருவரை நூலகராக நியமித்து அவருக்கு மாத ஊதியம் வழங்கி வருகிறேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் தொடங்கியபோது பலரும் எதிர்மறையாக பேசினார்கள். ஆனால் துணிந்து செயலில் இறங்கினேன். அதன் பயனாக நூலகத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்காத நபர்களும், இன்று தினமும் நூலகம் வந்து நாளேடுகளைப் படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் விடுமுறை நாட்களில் நூலகத்தைத் தேடி வந்து பயனடைகிறார்கள்.

உங்கள் இதர செயல்பாடுகள் என்ன?
தகுதியும், திறமையும் இருந்தும் மேற்படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்குப் பொருளாதார உதவிகளையும், கல்வி வழிகாட்டுதலையும், தையல் போன்ற கைவினைப் பயிற்சிகளையும் அளிக்கிறோம்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள்?
‘வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு’ என்ற முகநூல் தளத்தில் தொடர்ந்து எனது செயல்பாடுகளைப் பதிவு செய்து வருகிறேன். அவற்றைப் பலரும் பகிர்ந்து பாராட்டுகிறார்கள். சமூகம் சார்ந்த பல்வேறு அமைப்புகளும் விருது அளித்து ஊக்கப்படுத்தி வருகின்றன.

உங்கள் லட்சியம் என்ன?
சமூக நீதி காத்து, பெண்மையை மதித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் உணர்ந்து, இதயமுள்ள மனிதர்களாக, வரும் தலைமுறையினரை உருவாக்குவதே என்னுடைய லட்சியம். 

மேலும் செய்திகள்