பரதத்தில் ‘கின்னஸ்’ சாதனை படைத்த ஸ்வேதா!

நடனத்தில் என்னிடம் இருந்து வெளிப்படும் நளினமும், முக பாவங்களும், கண்களில் காட்டும் அபிநயமும் நன்றாக இருப்பதாகப் பலரும் பாராட்டினார்கள்.

Update: 2021-12-13 05:30 GMT
ள்ளியில் படித்துக் கொண்டே பரதக்கலை பயின்று, அதில் ‘கின்னஸ் சாதனை’ வரை எட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா. அவரது பேட்டி...

உங்களைப் பற்றி?
நான்  11-ம் வகுப்பு படிக்கிறேன். அப்பா பார்த்தசாரதி, அரசு ஊழியர். அம்மா ஹேமா, கலைப்பள்ளி நடத்தி வருகிறார்; யோகா ஆசிரியராகவும் இருக்கிறார். எனது சகோதரர் சாஸ்த்ரா, பொறியியல் படித்து வருகிறார்.

எந்த வயதிலிருந்து நடனம் கற்றுக் கொண்டீர்கள்?
உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதற்காக ‘சால்சா’ உள்ளிட்ட மேற்கத்திய நடனங்களை, மூன்று வயதிலிருந்து நான்கு வயது வரை கற்றுக் கொண்டேன். பின்னர் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். சத்யப்ரியா, விஜயலெட்சுமி, ரவிச்சந்திரன் என மூன்று குருக்களிடம் இதுவரை நடனம் பயின்றுள்ளேன்.

கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்?
சிறுவயதில் இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறேன். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், தஞ்சைப் பெரிய கோவில், கேரளாவின் குருவாயூரப்பன் கோவில் உட்பட பிரசித்தி பெற்ற பல கோவில்களின் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளேன்.

அரங்கேற்றம் எப்போது நடந்தது?
எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, சென்னை வாணி மஹாலில் எனது குருக்கள், உறவினர்கள், பெற்றோரின் நட்பு வட்டத்தினர் முன்னிலையில் அரங்கேற்றம் நடந்தது. நடனத்தில் என்னிடம் இருந்து வெளிப்படும் நளினமும், முக பாவங்களும், கண்களில் காட்டும் அபிநயமும் நன்றாக இருப்பதாகப் பலரும் பாராட்டினார்கள்.  

நடனத்தில் செய்துள்ள சாதனைகள் என்ன?
250-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். நான் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சிகள் ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', ‘ஏசியன் புக் ஆஃப்   ரெக்கார்ட்ஸ்' உள்ளிட்டவற்றில் பதிவாகி உள்ளது. புதுவையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பரதக் கலைஞர்கள் சேர்ந்து, ஒரு மணி நேரம் நடனமாடினோம். 

அந்த நிகழ்வு ‘கின்னஸ்’ சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஆடல் விண்மீன்’ உள்ளிட்ட விருதுகளும் பெற்றுள்ளேன். நடனத்தின் மீதுள்ள ஈடுபாடு ஒருபக்கம் இருந்தாலும் வருடந்தோறும் படிப்பிலும் முதல் மாணவியாகவும் இருந்து வருகிறேன். அதன் மூலமும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன்.

உங்களின் தனித்திறமைகள் என்ன?
ஓவியங்கள் வரைவதிலும், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் சிறுவயதில் இருந்தே ஆர்வமும், ஈடுபாடும் உண்டு. மாநில அளவிலான, தேசிய அளவிலான ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளேன். எனக்குத் தேவையான பேன்ஸி கம்மல், வளையல் உள்ளிட்டவற்றை நானே செய்துகொள்வேன்.

உங்கள் லட்சியம்?
நாட்டிலேயே குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நடனக் கலைஞர்கள் வரிசையில் இடம் பிடிக்க வேண்டும். படிப்பைப் பொறுத்தவரை சி.ஏ. படித்து, ஆடிட்டர் பணியில் உயர்ந்த இடத்தைத் தொட வேண்டும்.

மேலும் செய்திகள்