தன்னம்பிக்கை நாயகி மடோனா

1986-ல் மடோனாவின் `ட்ரூ ப்ளூ' எனும் இசை ஆல்பம் விற்பனையில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.

Update: 2021-10-11 10:59 GMT
இசை உலகில் என்றென்றும் நிலைத்திருக்கும் புகழ் பெற்றவர் மடோனா. மாபெரும் ரசிகர் கூட்டத்தைத் தனது இசையால் கைப்பற்றி வைத்திருக்கிறார். 

தனது சாதனைகள் அனைத்தையும் தானே முறியடித்தவர்.
மடோனா லூயிஸ் சிக்கோனே என்பது இவரது முழுப் பெயர். 1958-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி, அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பே என்ற நகரில் பிறந்தார். 

இவரது தந்தை சில்வியோ அந்தோணி சிக்கோனே. தாய் மடோனா வெரோனிகா. ஐந்து வயதிலேயே தாயை இழந்த மடோனா, பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார்.

இவரது ஆசிரியரான கிறிஸ்டோபர், மடோனாவின் திறமையைக் கண்டு ஊக்கப்படுத்தவே,  தனக்கு விருப்பமான இசையைத் தேர்ந்தெடுத்தார். அதனை முழுமையாகக் கற்க முடியாமல்  கையில் 32 டாலருடன் பிழைப்பைத் தேடி நியூயார்க் நகருக்கு சென்றார். ஒரு விடுதியின் கேளிக்கை அரங்கில், பின்னணி நடனம் ஆடுபவராக வாழ்க்கையைத் தொடங்கினார்.

இசைக்குழு ஒன்றில் பின்னணி பாடும் வேலையிலும் ஈடுபட்டார். பின்பு தனியாகப் பாடல்களை வெளியிடத் தொடங்கினார். இவரது ‘எவ்ரிபடி'  என்ற இசைத் தொகுப்பு, பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டார். 1986-ல் மடோனாவின் `ட்ரூ ப்ளூ' எனும் இசை ஆல்பம் விற்பனையில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.

பின்னர் மடோனா பாடல்கள் எழுதவும், திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கினார். பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், சிறந்த நடிகையாக வலம் வந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் வசூல் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தன.  

1990-ம் ஆண்டு இவர் வெளியிட்ட ‘த லைவ் ரெக்கார்ட் ஆஃப் தி டூர்'  எனும் இசை ஆல்பம்  முதல் கிராமி விருதைப் பெற்றது. 1996-ல் சிறந்த நடிகைக்கான சாதனையாளர் விருது பெற்றார். 
1998-ல் `தி ரே ஆஃப் லைட்' இசைத் தொகுப்புக்கு நான்கு கிராமி விருதுகள் பெற்றவர், அந்த ஆண்டே கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தார். பாப் இசை உலகில்  மைக்கேல் ஜாக்சனுக்கு இணையான இடத்தைப் பெற்றார்.

2008-ம் ஆண்டில் ‘ஸ்டிக்கி அண்டு  ஸ்வீட்'  என்ற இசைப் பயணம்  மூலம் பெரிய தொகையை வசூல் செய்தார். இது ஒரு தனிக் கலைஞரின் கச்சேரியின் வசூலில், உலக அளவில் முதல் இடம் பிடித்தது.

மடோனா தனது இரண்டு குழந்தைகளுடன் மேலும் நான்கு குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கட்டித் தந்து நிதி உதவிகள் செய்து வருகிறார். இதன் மூலம் 4 ஆயிரம் குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

திறமை இருந்தால் உலகை வெல்லலாம் என்பதற்கு மடோனாவின் வாழ்க்கை ஒரு சான்றாகும்.

மேலும் செய்திகள்