உடலில் ஹார்மோன் பாதிப்பு... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் அவரது உடலில் ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டு உள்ள போதும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் பல வெற்றிகளை கொடுத்தவர். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது. அவர் வெளியிட்டு உள்ள செய்தியின்படி, ஒரு சில நாட்களாக ஹார்மோன் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார். அவருக்கு பி.சி.ஓ.எஸ். என்ற மருத்துவ ரீதியிலான பாதிப்பும் காணப்படுகிறது.
இந்த பாதிப்பு பொதுவாக, சீரற்ற மாதவிடாய், முகம், உடல் பகுதிகளில் முடி அதிகம் வளர்தல் மற்றும் எடை கூடுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோக வேறு சில தீராத உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்த கூடிய ஆபத்தும் உள்ளது.
இதுதவிர, என்டோமெட்ரியாசிஸ் என்ற பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறேன் என தெரிவித்து உள்ளார். இது அதிக வலி ஏற்படுத்த கூடியது. கர்ப்ப குழாய் பகுதியின் வெளியே திசுக்கள் வளரும் ஆபத்தும் காணப்படும்.
இதுபற்றி குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்வில் கடினம் நிறைந்த பகுதியாக இது இருக்கும் என தெரியும். இதனால் சமச்சீரற்ற நிலை, வயிறு நிரம்பியது போன்ற உணர்வு மற்றும் வளர்சிதை மாற்றங்கள் ஆகியவற்றுடன் போராட வேண்டிய சிக்கலான நிலையிது என கூறுகிறார்.
ஆனால் இதனை, எதிர்த்து போராட வேண்டிய ஒன்றாக எண்ணாமல், இயற்கையான நிகழ்வு என அதனை ஏற்று கொள்ள தயாராகி உள்ளேன். அதனை எனது உடல் ஏற்று, அதற்கேற்ப, சிறந்த முறையில் செயல்படும். சரியான உணவு, நன்றாக தூங்குதல் மற்றும் எனது வேலையை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வது ஆகியவற்றுக்காக நான் நன்றி கூறி கொள்கிறேன்.
எனது உடல் தற்போது சரியாக இல்லை. ஆனால், இதயம் சீராக இயங்குகிறது. நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அதனால், மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் பாய்கின்றன.
இந்த சவால்களை எல்லாம் ஏற்று கொள்ள கூடியது போன்றதொரு பயணம். அவற்றுடன், என்னை அவை வரையறை செய்து விடாமல் கவனித்து கொள்கிறேன்... அதனால்...! இந்த விசயங்களை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் பெஸ்ட்செல்லர் என்ற வலைத்தொடர் ஆன்லைனில் வெளிவந்து உள்ளது. இதில் நடிகர்கள் மிதுன் சக்ரவர்த்தி, அர்ஜன் பாஜ்வா மற்றும் கவுகர் கான் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிகை சுருதிஹாசன் நடித்து வருகிறார். நடிகர்கள் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் தயாராகி வரும் சலார் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.