'சிம்புவுடன் காதலா?' - மனம் திறக்கிறார், சித்தி இத்னானி

‘வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், சித்தி இத்னானி.

Update: 2023-10-05 09:40 GMT

கன்னக்குழி அழகியான அவர், சமீபத்தில் நடித்த `காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

குஜராத், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பால் நெகிழ்ந்து போன சித்தி இத்னானி, செல்லும் இடமெங்கும் தமிழ் ரசிகர்களை புகழ்ந்தே வருகிறார். தமிழுக்கு புதுவரவாக வந்திருக்கும் `மும்பை அல்வா' சித்தி இத்னானியை சமூக வலைதளங்களில் பின்தொடருவோரும் ஏராளம். இயல்பாகவே சிரித்த முகமாக காணப்படும் சித்தி இத்னானி, `தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்கு மனம் திறந்தார். பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசினார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

பதில்:- இப்போ ஒரு இந்தி படத்துல நடிச்சுட்டு இருக்கேன். தமிழில் 2 படத்துல நடிக்க பேச்சுவார்த்தை போய்க்கிட்டு இருக்கு. புது வருஷத்துல நல்ல தகவல் வரும்னு நம்புறேன்.

கேள்வி:- படங்களை தேர்வு செய்வது எப்படி? என்ன மனநிலையில் அந்த முடிவு எடுப்பீர்கள்?

பதில்:- `வெந்து தணிந்தது காடு' படம் நல்ல ஹிட் ஆயுடுச்சு. எனக்கு நல்ல பேரும் கிடைச்சிருக்கு. இத அப்படியே மெயிண்டைன் பண்ணனும். அதனாலேயே நான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கேன். ஒவ்வொரு படத்தையும் பாத்து பாத்து யோசிச்சு செலக்ட் பண்றேன். ஆடியன்ஸ் பாராட்டணும், அவங்களுக்கு என்னோட ரோல் ஓகேவா இருக்கணும்னு ரொம்ப யோசிக்கிறேன்.

கேள்வி:- தமிழில் முதல் படத்திலேயே சிம்புவுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?

பதில்:- சிம்பு கூட நடிச்சது மறக்க முடியாத, சூப்பரான எக்ஸ்பிரீயன்ஸ். சிம்பு, நல்ல ஆக்டர், சிங்கர், டைரக்டர் என ஆல் ரவுண்டர் அவரு. நான் அவர பத்தி நிறைய கேள்விப்பட்ருக்கேன். அவர்கூட நடிச்சது, என்னோட ஒரு கனவு நிஜமானது மாதிரி ஒரு பீல். அவர் நடிச்ச `மாநாடு' பெரிய ஹிட். அந்த படத்துக்கு அப்புறம் அவர் நடிச்ச படம், `வெந்து தணிந்தது காடு'. சோ... ஆடியன்ஸ் ரொம்ப அட்டாச் ஆனாங்க இந்த படத்துல. எனக்கும் ஒரு கிரேட் ஆப்பர்சூனிட்டி கிடைச்சது.

கேள்வி:- வேற எந்த நடிகர்களுடன் நடிக்க ஆசை இருக்கிறது?

பதில்:- நிறைய நிறைய ஆசை இருக்கு. சிம்பு, ஆர்யா கூட நடிச்சாச்சு. அடுத்து ஜெயம் ரவி, கார்த்தி, தனுஷ் கூட நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறேன்.

கேள்வி:- உங்க கன்னக்குழியின் ரகசியம் என்னவோ?

பதில்:- என் அம்மாவுக்கும் கன்னத்துல குழி விழும். அந்த ஜீன் தான் எனக்கும் வந்துடுச்சு போல... (சிரிக்கிறார்)

கேள்வி:- நீங்க ஏதோ அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக பேச்சு அடிபட்டதே?

பதில்:- ரீசெண்டா... எடுத்த போட்டோசூட்ல கன்னக்குழி தெரியலைனு ஒரு பிரச்சினையே பண்ணிட்டாங்க... எடுத்த போட்டோ அப்டினா நான் என்ன செய்யமுடியும்? உடனே நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டேனு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... கன்னக்குழி பிடிக்கல போல...னு என்னன்னமோ பேச ஆரம்பிச்சுட்டாங்க... அழகா இருக்குற கன்னக்குழிய மறைச்சு நான் என்ன பண்ணப்போறேன்? சிரிச்சா தான் குழி விழும். அந்த போட்டோசூட்ல எடுத்த போட்டோஸ்ல மைல்டா தான் ஸ்மைல் இருக்கும். என்னங்க பண்றது? அதுக்கப்புறம் குழி விழுகிற மாதிரி ஸ்மைல் போட்டோ ஒன்னு போட்டதுக்கு அப்புறம் தான் நிம்மதி வந்துச்சு.

கேள்வி:- உங்களது அழகை பராமரிக்க என்னென்ன செய்கிறீர்கள்?

பதில்:- உள்ளத்தில் இருக்கிற மகிழ்ச்சி தான் முகத்துல தெரியும். மனசு ஹேப்பியா இருந்துச்சுன்னா... முகம் பிரைட்டா இருக்கும். என்னதான் மேக்கப் போட்டாலும், கிரீம்கள் யூஸ் பண்ணினாலும் மனசு ஹேப்பியா இருக்குறது தான் முக்கியம்.

கேள்வி:- ஆன்மிகத்தில் நாட்டம் இருக்கிறதா?

பதில்:- ஆன்மிகத்தில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. வாழ்க்கைக்கு தேவையான விஷயத்துல ஆன்மிகமும் முக்கியமான ஒன்னு. முக்கியமா சினிமாவுல அப் அண்ட் டவுன்ஸ் நிறைய இருக்கும். சோ... மனரீதியாவே நாம ரொம்ப ஸ்டிராங்கா இருக்கணும். இதுக்கு ஆன்மிகம் தான் ரொம்ப சப்போர்ட் பண்ணும். அதுதான் நம்மோட பலமா இருக்கும்.

கேள்வி:- தமிழ் ரசிகர்கள் பற்றி... உங்கள் கருத்து?

பதில்:- தமிழ் ஆடியன்ஸ் தான் என்னோட ஹார்ட். தமிழ்நாடு தான் என்னோட வீடு. எத்தனையோ மொழியில் நடிச்சாலும் தமிழில் கிடைச்ச வரவேற்பும், ஆடியன்ஸ் தந்த அன்பும் என்னைக்குமே என்னால மறக்கவே முடியாது. நான் எங்க போனாலும் இதை மட்டும் மறக்கவே மாட்டேன்.

கேள்வி:- வாழ்க்கையில் உங்களது ரோல் மாடல் என்றால் அது யார்?

பதில்:- என்னோட அம்மா தான் எனக்கு ரோல்மாடல். அவங்க சீரியல் நடிகையும் கூட. ரொம்ப போல்ட் ஆனவங்க. வீட்டு வேலையையும், வெளி வேலையையும் ஒண்ணா பாத்துக்குறது தான் பெண்ணோட சூப்பர் பவர். அத அவங்க ரொம்ப சரியா செஞ்சாங்க. எங்கள நல்லா பாத்துக்கிட்டாங்க...

கேள்வி:- சினிமா பயணத்தில் உங்களது லட்சியம் என்ன?

பதில்:- தமிழ் சினிமாவுல நிறைய டைரக்டர்ஸ் வந்திருக்காங்க.. புதுப்புது ஐடியா வருது. நல்ல படங்கள் வந்துகிட்டு இருக்கு. அந்த வகையில் பெஸ்ட் டைரக்டர்களோட படங்களில் நடிக்க ரொம்ப ஆசைப்படுறேன்.

கேள்வி:- காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- லவ் சூப்பரான விஷயம். லவ் மேலே எல்லாத்துக்கும் நம்பிக்கை இருக்கு. லைப்ல லவ்ங்குறது முக்கியமான பார்ட்னு சொல்லுவேன். எல்லா ரிலேஷன்லயும் லவ் இருக்கு. அம்மாவுக்கு, அப்பா மேல... அப்பாவுக்கு, அம்மா மேல... ரெண்டு பேருக்கும் குழந்தைங்க மேலனு லவ் எல்லா இடத்துலயும் இருக்கு. வாழ்க்கை பூராவும் லவ் வரும்.

கேள்வி:- சினிமா ஆசை உங்களுக்குள் துளிர் விட்டது எப்போது?

பதில்:- அம்மா தான் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அவங்கள பாத்து தான் எனக்கும் சின்ன வயசுலேயே சினிமா ஆசை வந்துச்சு. அப்புறம் சினிமானு பாத்தா, ஸ்ரீதேவி நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். மணிரத்னம் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்படியே தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா சினிமா ஆசை எட்டிப் பாத்துச்சு... இப்போ நடிகையாகவே ஆயாச்சு.

கேள்வி:- ஓ.டி.டி. தளங்கள் சினிமாவுக்கு வளர்ச்சியா, வீழ்ச்சியா?

பதில்:- நல்லதுனு தான் சொல்லமுடியும். சினிமாவுல இப்போ நிறைய ஆப்ஷன்ஸ் வந்தாச்சு.. அதுமாதிரி தான் ஓ.டி.டி.யும். பேய் படம் பிடிச்சவங்க பேய் படம் பாக்கலாம். காமெடி பிடிச்சவங்க காமெடி மூவி பாக்கலாம். இதனால சினிமாவுக்கு எந்த பிரச்சினையும் இல்ல.

கேள்வி:- கிசுகிசு பற்றி உங்கள் கருத்து...

பதில்:- கிசுகிசு பத்தியெல்லாம் நாம் ரொம்ப யோசிக்க கூடாது. சினிமாவுக்குள்ளே வந்துட்டாலே, நம்ம பத்தி வித்தியாசமா பேசத்தான் செய்வாங்க. நிறைய விஷயம் நம்ம பத்தி நல்லதா வரும். சில விஷயங்கள் திடீர்னு தப்பா வந்துடும். அதுல உண்மை இல்லாட்டியும் அத நம்ப ஆரம்பிச்சுடுவாங்க. என்ன இந்த கிசுகிசுவெல்லாம் படிக்க நல்லா இருக்கும். அவ்வளவுதான். இதையெல்லாம் ரொம்ப மைண்ட்ல ஏத்திடக் கூடாது. நம்ம வேலையை பாத்து போய்க்கிட்டே இருக்கணும்.

கேள்வி:- நீங்களும், சிம்புவும்...

பதில்:- அதான் கிசுகிசு பத்தி முன்னாடியே சொல்லிட்டேன்ல...

கேள்வி:- மறக்க முடியாத விஷயம்?

பதில்:- `வெந்து தணிந்தது காடு' படத்தோட முதல் நாள் ஷூட்டிங் தான் எனக்கு மறக்க முடியாத விஷயம். சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணில நானும் இருக்கேனு நினைக்கும்போதே, கனவு நிஜமானது மாதிரி ஒரு பீலிங் கிடைச்சது.

கேள்வி:- உங்களது பொழுதுபோக்கு என்ன?

பதில்:- சோசியல் மீடியா தான் என்னோட பொழுதுபோக்கு. பேன்ஸ் கூட பேசுறது, போட்டோ ஷேர் பண்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கேள்வி:- உங்களது பலம், பலவீனம் என்ன?

பதில்:- ஹேப்பி தான் என்னோட பலம். படத்துல நடிச்சாலே நான் ஸ்டிராங்கா பீல் பண்ணுவேன். நடிக்காம சும்மா இருந்தேனா, கொஞ்சம் வீக்கா இருக்கோம்னு பீல் பண்ணுவேன்.

இப்படி எதார்த்தமாய் முடித்தார், சித்தி இத்னானி.

பயோ டேட்டா

பெயர் - சித்தி இத்னானி

செல்லப்பெயர் - சித்தி

பிறந்த தேதி - ஜனவரி 10

பிறந்த இடம் - மும்பை

தந்தை பெயர் - அசோக் இத்னானி

தாய் பெயர் - பால்குனி தேவ்

உயரம் - 5 அடி 5 அங்குலம்

எடை - 50 கிலோ

பிடித்த உணவு - நெய் ரோஸ்ட்

பிடித்த எண் - 10

பிடித்த நிறம் - பர்பிள்

ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது- எனது நீண்ட பயணத்தில் உறுதுணையாக இருங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்