'பெண்களை மிக எளிதாக அங்கீகரிக்கமாட்டார்கள்' - மனம் திறக்கிறார் நடிகை ராஷி கன்னா

Update: 2023-08-15 08:24 GMT

சுதந்திர தினத்தையொட்டி, நடிகை ராஷி கன்னாவின் சிறப்பு பேட்டி...

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்...

அந்த பேச்சுக்கே இடமில்லை. நடிப்பு தவிர வேறு எந்த எண்ணமும் எனக்கு இல்லை. நான் விதியை நம்புகிறேன். நமது தலையில் எழுதி வைத்தது தான் நடைபெறும் என்பது எனது நம்பிக்கை.

வாழ்க்கையில் என்னென்ன 'ரிஸ்க்' எடுத்துள்ளீர்கள்?

நடிப்பு என்றாலே ரிஸ்க் தான். ஒரு காண்டிராக்டில் கையெழுத்து போடும்போது அந்தப் படம் ஓடுமா?, இல்லையா? என்பது தெரியாது. வெற்றி, தோல்வி என்பது ரசிகர்கள் கையில். ஒரு படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருப்பது போலவே, தோல்விக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு படம் தோல்வி அடையும் போது அதில் நடித்த நடிகைகளின் எதிர்காலம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

சினிமாத் துறையில் நடிகைகள் தெரிவித்து வரும் பாலியல் புகார்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

எல்லா தொழிலிலும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. சினிமா ஒரு கிளாமர் உலகம். அனைவரின் பார்வையும் இந்தத் துறை மீது அதிகமாக இருக்கும். எனவே இங்கு நடைபெறும் சின்ன விஷயங்களைக் கூட பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறார்கள். இப்போது எல்லாம் பெண்களுக்கும் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்பது மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது. எங்களுக்கும் அப்படித்தான்.

நடிகர்களுக்கு இருக்கும் முன்னுரிமை நடிகைகளுக்கு இல்லை என்கிறார்களே...

எல்லா இடத்திலும் பெண்களை கொஞ்சம் குறைத்து தான் பார்க்கிறார்கள். பெண்களை உயர்ந்த இடங்களில் அவ்வளவு சீக்கிரமாக அங்கீகரிக்க மாட்டார்கள். உயர்ந்த இடத்திற்குச் செல்வதற்காக பெண்கள் மிகவும் போராட வேண்டி இருக்கிறது. மனிதர்களுக்குள் தலைமுறை தலைமுறையாக ஊறிப்போன ஆண்-பெண் வித்தியாசம் அவ்வளவு சீக்கிரம் அவர்களை விட்டு விலகாது.

சினிமாவில் இப்போது உங்கள் நிலை என்ன?

நான் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். சாதாரணமாக நான் கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் நினைத்துக் கொண்டு வாழ மாட்டேன். தற்பொழுது எப்படி இருக்கிறோம்? என்பதை பற்றி மட்டுமே யோசிப்பேன். அதனால் எனக்கு அதிருப்தி இருக்காது. எப்பொழுதும் நான் ஆனந்தமாகவே இருப்பேன்.

உங்களின் திருமணம் எப்போது?

சில ஆண்டுகளாக எல்லோரும் இதே கேள்வியைத் தான் கேட்கிறார்கள்? இப்போது என் இலக்கு சினிமாப் பயணத்தின் மீது தான் உள்ளது. திருமண விஷயத்தில் எனக்கு இன்னும் தெளிவு வரவில்லை. அது வந்த பிறகு முடிவு எடுப்பேன். ஒரு காலத்தில் திருமணமான ஹீரோயின்களுக்கு சினிமா பயணமே முடிந்துவிடும். ஆனால் இப்போது அப்படி அல்ல. திருமணமான பிறகு கூட வாய்ப்புகள் வருகின்றன.

இதுவரை நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்?

'வேர்ல்டு பேமஸ் லவ்வர்' படத்தில் யாமினி கதாபாத்திரம் தான். அது மிகவும் சவாலான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் நான் வாழ்ந்து காட்டினேன் என்று அனைவரும் சொன்னார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட நீண்ட காலம் இந்த கதாபாத்திரம் என்னை 'டிஸ்டர்ப்' செய்தது.

ரசிகர்களுக்கு சொல்ல விரும்பும் சுதந்திர தின செய்தி...

வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Tags:    

மேலும் செய்திகள்