''ஆண்கள் மீது எனக்கு கோபம் தான்'' - மனம் திறக்கிறார் வாணி போஜன்

சினிமா நடிகைகளில் ‘சேலையில் தான் இவர் ரொம்ப அழகா இருப்பார்' என்று மனதில் நினைத்தால் ‘டக்'கென தோன்றுபவர், நம்ம வாணி போஜன் தான்.;

Update:2023-08-17 12:59 IST

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலிக்கும் வாணி போஜன், உண்மையிலேயே அழகுப் பதுமை தான். நடையிலும், உடையிலும், பேச்சிலும் வசீகரிக்கும் நடிகையாக திகழ்கிறார். 'ஓ மை கடவுளே...', 'லாக்கப்', 'மலேசியா டூ அம்னீசியா', 'மிரள்', 'பாயும் ஒளி நீ எனக்கு', 'லவ்' போன்ற படங்களில் நடித்துள்ள 'ஊட்டி ஆப்பிள்' வாணி போஜனை, 'தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்காக சந்தித்தோம். மனம் விட்டு பேசினார், மனதில் உள்ளதை கொட்டினார். அவரது 'பளிச்' பேட்டி, இதோ...



ஆண்கள் மேல் என்ன கோபம் உங்களுக்கு...

ஆண்கள் மீது கோபம் இருக்கு. எல்லோரின் மீதும் கிடையாது. மணிப்பூரில் நடந்த பாலியல் பிரச்சினையில் ஈடுபட்டது ஆண்கள் தானே... இப்படிப்பட்ட ஆண்கள் மீது எனக்கு கோபம் உண்டு. நீ மரியாதை தந்தா நானும் மரியாதை தருவேன். அவ்வளவுதான். ஆண்கள், பெண்கள் என்பதெல்லாம் பார்ப்பதே கிடையாது. அடிதான். எப்போது தான் பெண்கள் மேலே வருவது? இப்படி தட்டிக்கிட்டே இருந்தா எப்படி வரமுடியும்? ரெயில் நிலையங்களில் பெண்களுக்கு எப்படியெல்லாம் கொடுமை நடக்குதுனு தெரியுமா? எத்தனை ஆண்களை நான் துரத்தி அடிச்சிருக்கேன்னு தெரியுமா? ஒருமுறை அப்படிப்பட்ட ஒருத்தனை அடிக்க ஓடினேன். தப்பிச்சு டிரெய்ன்ல ஏறிட்டான். டிரெயின்ல விழுந்து செத்திருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேன். இப்படிப்பட்ட ஜென்மங்கள் இருக்கவே கூடாது. இப்ப சொல்லுங்க, ஏன் ஆண்கள் மீது கோபம் வரக்கூடாது? ஷூட்டிங்கிற்கு காரில் வந்து நடிச்சு கொடுத்திட்டு காரிலேயே ஏறி போற பொண்ணு நான் கிடையாது. (டென்ஷன் ஆகிறார்)

ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க...

நான் 'செலிபிரிட்டி' என்பதால் சாதுவாக இருப்பது போல நடிக்க முடியாதுங்க.

அழகாக இருக்கீங்களே... உங்கள் அழகுக்கு என்ன காரணம்?

அம்மா, அப்பா தான்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நீங்கள். இரண்டிலும் உள்ள வேறுபாடு என்ன?

சின்னத்திரையில் ஒரு தொடர் என்பது 5 ஆண்டுகள் வரைப் போகும். ஆனால் வெள்ளித்திரையில் டக்கென காலம் ஓடிடும். அதேவேளை வெள்ளித்திரையில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கலாம்.

வாணி போஜன் என்றாலே 'மீம்ஸ்' பிரியர்கள் குஷியாகி விடுகிறார்களே...

20 வயதில் இப்படி 'மீம்ஸ்'களை பார்த்திருந்தால் வருத்தப்பட்டிருக்கலாம். நான் இப்போது 30-ஐ கடந்தாச்சு. இப்போகூட யாரோ எழுதியதை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தா, என் வாழ்க்கையை நான் எப்போ வாழுறது?

உங்களைப் போலவே சின்னத்திரையில் இருந்து வந்த பிரியா பவானி சங்கருடன் உங்களுக்கு தொழில் போட்டி என்று கூறுகிறார்களே...

எனக்கும், அவருக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. எங்களுக்குள் எந்த போட்டி, பொறாமையும் இல்லை.

ரசிகர்கள் கனவில் நீங்கள் வந்தாலும், சேலை கட்டித்தான் வரீங்க... சேலைக்கும், உங்களுக்கும் அப்படி என்ன கனெக்ஷன்?

இப்படி கேக்கும்போதே சந்தோஷமா இருக்கு. 'தெய்வமகள்' சீரியலில் தாசில்தாராக நான் நடிச்சபோது, அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க நினைச்சேன். எனவே சேலை கட்டி நடிச்சேன். அது அப்படியே தொடர்ந்துவிட்டது. சேலை என்பது என்னோட 'லைப் அட்டாச்மெண்டாக' ஆயிடுச்சு.

'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கோட்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னை பொறுத்தவரை காதலும், திருமணமும் ஒன்னு தான். ஒருவனுக்கு ஒருத்தி. பிடிக்கலைனாலும் வாழ்ந்தாகணும். இதுலாம் இந்த சமூகம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் விஷயங்கள். என்னை பொறுத்தவரையில் காதலில் இருக்கும் உறவும், அன்பும் கல்யாணத்தில் இருக்குமா? என்பது 'டவுட்' தான்.

இப்போதைய திருமண பந்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இப்போ நான் பார்க்கும் எந்த தம்பதிகள் மேலேயும் எனக்கு நம்பிக்கை கிடையாது.

சினிமாவுக்கு வந்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்...

சின்னத்திரையில் நடித்தது போதுங்கிற முடிவுக்கு வந்தபோது ஒரு வருஷம் 'பிரேக்' எடுத்தேன். 5 வருஷம் தொடர்ந்து சீரியலில் நடிச்சேன். அந்த 'கேப்'பில் நிறைய படவாய்ப்புகள் வந்தது. ஒரு படிக்கட்டில் நிற்கும்போது கீழே இறங்கவேண்டுமா, மேலே ஏற வேண்டுமா? என்பது நம் முடிவு தான். ஏன் ஏறிப் போகக் கூடாது? என்று யோசித்தேன். சினிமாவுக்கு வந்து விட்டேன்.

இது ஆசையா, பேராசையா?

நான், நீங்க, யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், மனிதனின் ஆசை எப்போதுமே ஒரு இடத்தில் நிற்காது. அடுத்தடுத்து போய்கிட்டே இருக்கும்.




நடிகர்களுடன் உங்களை இணைத்து ஏதேதோ பேசுகிறார்களே...

என்னை வச்சு வரும் 'கிசுகிசு' பற்றி சந்தோசம் தான் படுறேன். ஏனா என்னை பத்தி ஏதோ எழுதுறாங்கல்ல.. கிசுகிசு வந்தா பேமஸ் ஆகலாம். டிரெண்டிங்கில் தொடர்ந்து இருப்போம்ல... எனவே கிசுகிசு வரட்டும். சந்தோஷம் தான்.

மறக்க முடியாத விஷயம் எது?

என்னை ரிஜெக்ட் செய்த ஒரு மாடலிங் ராம்ப் வாக் நிகழ்ச்சியில், ஒரு கட்டத்தில் 'செலிபிரிட்டி'யாக ஒய்யாரமாக நடந்து சென்றேன். எப்படி சூப்பர்ல?

வாணி போஜனின் கொள்கை?

ஊட்டியில் எங்களுக்கு சொந்த டீ எஸ்டேட் இருக்கு. அதை வைத்து தான் குடும்பம் ரன் ஆகுது. என் தந்தை சொத்து அது. அவர் சேர்த்தது. அது என்னுடையது கிடையாது. நான் சேர்க்கும் சொத்து தான் என்னுடையது. எந்த சூழலிலும் பெற்றோரிடம் எதிர்பார்த்து நிற்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கேன்.

மீண்டும் சின்னத்திரையில் தலைகாட்டுவீர்களா?

சின்னத்திரை தான் எனது தாய் வீடு. அதை மறக்கவில்லை. எனவே கெஸ்ட் ரோலில் நடிக்க கூப்பிட்டாலும் போவேன். அதுவும் குமரன் சார் டைரக்டு செய்யும் சீரியலில் தான் அப்படி நடிப்பேன். ஏன்னா 'தெய்வமகள்' சீரியல் மூலமாக, எனக்கு முகவரி கொடுத்தது அவர் தான்.

'பேச்சுலர்' படத்தில் நடிக்காதது ஏனோ?

எத்தனையோ படங்களை தவறவிட்டு வருந்தியிருக்கிறேன். ரீசண்டா அப்படி தவறவிட்ட படம்னா 'பேச்சுலர்' தான். சீரியலில் 'சத்யா' கேரக்டரில் என்னை பொதுமக்கள் பார்த்து அடையாளம் தந்துட்டாங்க... எனவே எனக்கும் ஒரு பொறுப்பு வந்துடுச்சு. அந்த ரெஸ்பான்ஸிபிலிட்டியை பிரேக் பண்ண வேண்டாம்னு தான் பார்க்கிறேன்.

எந்த கதாபாத்திரம் உங்களுக்கு பொருந்தும்னு நினைக்கிறீங்க...

துணிச்சலான எந்த கதாபாத்திரமும் எனக்கு பொருந்தும் என்று நினைக்கிறேன். ஏன்னா சாப்டா நடிக்கிற ஏஜ்ல நான் இல்ல.

சினிமாவில் 'அட்ஜெஸ்மெண்ட்' என்ற புகார்கள் அடிக்கடி வருகிறதே... நீங்களும் இதை எதிர்கொண்டீர்களா?

சினிமாவில் மட்டுமில்லீங்க... எல்லா இடங்களிலும் பெண்களுக்கு இந்த பிரச்சினை இருக்கு. சினிமா ஒரு பெரிய இண்டஸ்ட்ரி என்பதால் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்கிறது. எனக்கு இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் வரவில்லை.

நடிக்க செல்வதற்கு முன்பாக 'ஹோம் ஒர்க்' செய்யும் பழக்கம் உண்டா?

நோ... ஜாலியாக போவேன். நடிப்பேன். அவ்வளவு தான்.




உங்களை எளிதாக ஏமாற்றிவிடலாமா?

என்னோட பலமும், பலவீனமும் எமோஷனல் தான். என்னை ஈசியாக ஏமாற்றிவிடலாம். மற்றவர்களுக்காக பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு என் வாழ்க்கையை நான் வாழுறதே இல்லை.

உற்ற துணை யாரோ...

மனசாட்சி தான். அது எனக்கு எப்போதுமே துரோகம் செய்வது கிடையாது.

எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது உண்டா?

எதிர்காலத்தைப் பற்றி யோசித்து யோசித்து இன்றைய வாழ்க்கையை தொலைக்க நான் முட்டாள் இல்லை.

சினிமாவில் சாதிப்பதற்கு தேவை திறமையா, சிபாரிசா?

உண்மையிலேயே திறமை தான்.

அடைய வேண்டிய இலக்கு?

அதிக படங்கள் நடிச்சு சாதிக்க நினைக்கல. நடிச்ச படங்களில் 'வாணி போஜன் சூப்பரா நடிச்சுருக்காங்கப்பா' என்று அனைவரும் சொன்னால் போதும்.

சின்ன ஆசை?

சூர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்கனும்னு ஆசை இருக்கு.

இவ்வாறு கலகலப்பாக பேசி முடித்தார், வாணி போஜன்.

பயோடேட்டா

பெயர் - வாணி போஜன்

செல்லமாக அழைப்பது - 'வான்'

பிறந்த தேதி - 28 அக்டோபர்

பிறந்த இடம் - ஊட்டி

உயரம் - 5 அடி 1 அங்குலம்

எடை - 53 கிலோ

பிடித்த உணவு - அம்மா சமைக்கும் அத்தனை

உணவுகளும்

பிடித்த நடிகர் - தனுஷ்

பிடித்த நடிகை - நயன்தாரா

பிடித்த நிறம் - கருப்பு

லக்கி நம்பர் - 7

ரசிகர்களுக்கு சொல்ல

விரும்புவது -

என்றென்றும் நன்றி ....

Tags:    

மேலும் செய்திகள்