வாழ்வு தொடங்குமிடம் நீதானே: சினிமா விமர்சனம்

ஓரினக்காதல் என்றால் என்னென்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சொல்லியிருக்கும் படம்.

Update: 2023-10-02 06:21 GMT

 கட்டுக்கோப்பான இறை நம்பிக்கை சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் நிரஞ்சனா நெய்தியார். அவ்வளவாக வெளியுலகம் அறியாதவர். அந்த சமயத்தில் குறும்படம் இயக்குவதற்காக திருச்சியில் இருந்து வருகிறார் சுருதி பெரியசாமி.

குறும்படம் எடுப்பதற்கு உதவி செய்யுமாறு நிரஞ்சனாவின் தந்தையிடம் கேட்கிறார். அவரும் சரி என்று சொல்வதோடு, படத்தை எடுத்து முடிப்பதுவரை தன் வீட்டிலேயே தங்குவதற்கு சுருதி பெரியசாமிக்குஅனுமதி அளிக்கிறார்.

அப்போது சுருதியை ஏக்கத்தோடு பார்க்கிறார் நிரஞ்சனா. முதல் பார்வையிலேயே இருவரும் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். நாளடைவில் இருவருடைய கண் பார்வையும் காதல் பார்வையாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழும் முடிவுக்கு வருகிறார்கள். அவர்களுடைய அந்த முடிவால் குடும்பத்திலும் ஊரிலும் ஏற்படும் பிரச்சினைகளும் அதை எதிர்கொண்டு ஒன்று சேர்ந்தார்களா? என்பதும் மீதி கதை..

கண்களால் கைது செய்யும் அளவுக்கு அழகாக இருக்கிறார் நிரஞ்சனா. அதிகம் பேசாமல் அமைதியாக நடித்து ஸ்கோர் செய்து விடுகிறார்.

சுருதி பெரியசாமி அதிரடி காட்டி இருக்கிறார். பெண் சுதந்திரத்தை போற்றுவது, ஆணாதிக்கத்தை எதிர்ப்பது என எல்லா இடங்களிலும் அபாரமான நடிப்பில் சதம் அடித்துள்ளார்

அர்ஷத், பெராஸ், ஆறுமுகவேல், பிரதீப், ஷங்கர், நிரஞ்சன், தஸ்மிகா, கண்ணன் ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு.

நெய்தல் நிலத்தின் அழகை பிரமாதமாக படம் ஆக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல கிருஷ்ணன்.

தர்ஷன் குமார் பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வைக்கின்றன.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் தன் பாலினத்தவர் மீது வந்தால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்றும் துணையை தேர்வு செய்யும் உரிமை தனி மனிதனின் சுதந்திரம் என்பதையும் நேர்த்தியாக சொல்லியுள்ளார் இயக்குனர் ஜெயராஜ் பழனி.

ஆபத்தான கதையை ஆபாசம் இல்லாமல் படம்பிடித்து இருப்பது சிறப்பு.

கதையில் கூடுதல் சுவாரசியம் இல்லாதது பலகீனம்.

Tags:    

மேலும் செய்திகள்