800 : சினிமா விமர்சனம்

உலக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம்.

Update: 2023-10-07 03:37 GMT

இலங்கை மலையகத் தமிழரான முத்தையா முரளிதரன் கலவரங்களுக்கு மத்தியில் கல்வியை தொடர்வதுபோல் படம் துவங்குகிறது.

சிறு வயதில் விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்க்கிறார். சில இடங்களில் தமிழர் என்பதால் அலட்சியம் செய்கின்றனர்.

ஆனாலும் திறமை காரணமாக தேசிய அணியில் இடம் கிடைக்கிறது.

ஒரு கட்டத்தில் முத்தையாவின் தேவையை உணர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கின்றனர்.

அதன் பிறகு பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து 800 விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துகிறார் என்பது மீதி கதை.

முத்தையா முரளிதரனாக நடித்துள்ள மதூர் மிட்டல், பல காட்சிகளில் நம்பத்தக்க வகையிலும், பிரமாதமாகவும் நடித்திருக்கிறார்.

அப்பாவிடம் குறும்புத்தனம், பாட்டியிடம் பாசம், அம்மாவிடம் செல்லம், சக விளையாட்டு வீரர்கள் கேலி செய்யும்போது சகிப்பு, விளையாட்டில் குறை கூறும்போது தவிப்பு என படம் முழுவதும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

வேலராமமூர்த்தி, ஜானகி சுரேஷ், மகிமா நம்பியார், கிங் ரத்தினம், நரேன், நாசர், யோகி ஜேபி, சரத் லோகித்ஷாவா, மாஸ்டர் ரித்விக், பிரித்வி என அனைவரும் தங்கள் வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக சில இடங்களில் காட்சிகள் அவசர கோலத்தில் தாவிச் செல்வது பலகீனம்.

ஒவ்வொரு காட்சிகளையும், நிகழ்வுகளையும் யதார்த்தமாகவும் பிரம்மாண்டமாகவும் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். உலகின் பல கிரிக்கெட் மைதானங்கள், இலங்கையின் இயற்கை வளங்கள் என அத்தனை அழகையும் தன் கேமராவில் மிக அழகாக அள்ளிச் சுருட்டி இருப்பது அற்புதம். பல இடங்களில் அந்தரத்தில் பறந்து தந்திரமாக படம் பிடித்திருப்பது அருமை.

நிஜத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தன் பின்னணி இசையால் பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் ஸ்ரீபதி. இலங்கைக்கும், கிரிக்கெட் விளையாட்டுக்கும் அவருடைய அளப்பரிய பங்கு எத்தகையது என்பதை உள்ளதை உள்ளபடி சொல்லி கவனத்தை ஈர்த்துள்ளார்.

நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் சினிமாவுக்குரிய சென்டிமென்ட் காட்சிகளையும் லாவகமாக இணைத்ததிலும் இயக்குனரின் திறமை பளிச்சிடுகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு கவரும்.

Tags:    

மேலும் செய்திகள்