திரையின் மறுபக்கம் : சினிமா விமர்சனம்

சினிமா எடுக்க வரும் தயாரிப்பாளரை எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தை பிடுங்கி நடுத்தெருவில் விடுகிறார்கள் என்பதே ”திரையின் மறுபக்கம்” படத்தின் கதை.

Update: 2023-10-19 04:24 GMT

கிராமத்தில் இருந்து சென்னை வரும் விவசாயி முகமது கவுஸ், டுபாக்கூர் டைரக்டர் நடராஜன் மணிகண்டனின் ஆசை வார்த்தைகளில் மயங்கி படம் தயாரிக்க முன்வருகிறார். ஊரில் இருக்கும் நிலபுலன்களை விற்று பணத்தை சினிமாவில் போடுகிறார்.

படத்தை எடுத்து வினியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பிக்கிறார். அதில் ரசிகர்கள் விரும்பும் காதல், சண்டை மற்றும் கிளுகிளு காட்சிகள் இல்லை என்று வாங்க மறுக்கிறார்கள்.

இதையடுத்து பைனான்சியரிடம் வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி மீண்டும் படப்பிடிப்பு நடத்தி புதிய காட்சிகளை சேர்க்கிறார். ஆனாலும் படத்தை வாங்க ஆள் இல்லை. இதனால் என்ன முடிவு எடுத்தார். படத்தை திரைக்கு கொண்டுவர முடிந்ததா? என்பது மீதி கதை.

மோசடி டைரக்டராக வரும் நடராஜன் மணிகண்டன் இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஹாலிவுட் சி.டி.க்களை பார்த்து கதை தயார் செய்வது, தயாரிப்பாளர்களிடம் பழைய படங்களின் கதையை சொல்லி ஏமாற்றுவது என்று காட்சிகளை கலகலப்பாக நகர்த்துகிறார்

சூர்யாவுக்கு உன்னை ஜோடியாக்குகிறேன் என்று சொல்வதை நம்பி ஏமாறும் ஹேமா ஜெனிலியா மற்றும் புரோக்கர்களாக வந்து பொய் சொல்லும் அனைவருமே தேவையான நடிப்பை வழங்கி உள்ளனர்.

அப்பாவி தயாரிப்பாளராக வரும் முகமது கவுஸ் விரக்தி, ஏமாற்றம், தவிப்பு, கவலை என அத்தனை உணர்வுகளையும் முகத்தில் வெளிப்படுத்தி அபாரமான நடிப்பை வழங்கி இருக்கிறார். முடிவு பரிதாபம்.

ரிஷா நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

சில காட்சிகள் நாடகத்தனமாய் நகர்வது பலகீனம்.

சினிமா எடுக்க வரும் தயாரிப்பாளரை எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தை பிடுங்கி நடுத்தெருவில் விடுகிறார்கள் என்பதையும், திரைக்கு பின்னால் நடக்கும் தகிடுதத்தங்களையும், அழுத்தமான திரைக்கதையில் கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு படமாக கொடுத்துள்ள இயக்குனர் நிதின் சாம்சன் முயற்சியை பாராட்டலாம்.

அவரே சில காட்சிகளில் நடித்து தேர்ந்த நடிகராகவும் பளிச்சிடுகிறார்.

அனில் இசையில் "ஏமாந்து போடா முட்டாளே, ஒருமுறை பார்த்தால் உயிர்போகும்" பாடல்கள் கேட்கும் ரகம்.

Tags:    

மேலும் செய்திகள்