புதுவேதம்: சினிமா விமர்சனம்

ஆதரவற்றவர்களின் வாழ்வியலுடன் காதல், நட்பு, குடும்ப உறவுகளை கோர்த்த கதையே ”புதுவேதம்” படம்.

Update: 2023-10-22 07:40 GMT

தாயால் ஒதுக்கப்பட்ட விக்னேஷ் குப்பை மேட்டில் வளர்கிறார். அவருடன் இரு கால்களை இழந்த ரமேஷ் நெருங்கிய நட்புடன் இருக்கிறார். அதே குப்பை மேட்டில் இன்னும் சிலரும் வளர்கிறார்கள். எல்லோரும் குப்பையில் கிடக்கும் இரும்பு, மாத்திரை உள்ளிட்ட பொருட்களை பொறுக்கி எடுத்து விற்று அன்றாட வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

தன்னுடன் குப்பை மேட்டில் வளர்ந்த வருணிகா மீது விக்னேசுக்கு காதல் வருகிறது. வருணிகாவோ லாரியில் குப்பை கொட்ட வரும் டிரைவரை விரும்பி அவரிடம் ஏமாந்து வயிற்றில் குழந்தையை சுமந்து நிற்கிறார்

குப்பை கிடங்கில் இருந்து பொறுக்கி கொடுக்கும் மருந்து மாத்திரைகளை இமான் அண்ணாச்சி வாங்கி புதிய மருந்துபோல் லேபில் ஒட்டி ஆஸ்பத்திரிகளில் விற்று கோடீஸ்வரராக உயர்கிறார்.

விக்னேஷ் காதல் என்ன ஆனது? இமான் அண்ணாச்சி சட்டத்தின் பிடியில் சிக்கினாரா? என்பதற்கு விடை சொல்கிறது மீதி கதை…

விக்னேசுக்கு வயதுக்கு மீறிய கனமான கதாபாத்திரம். அபாரமான நடிப்பின் முலம் அதற்கு சிறப்பு செய்துள்ளார். விரும்பிய பெண் இன்னொருவரை காதலிக்கிறார் என்று அறிந்து காதலை தனக்குள்ளேயே வைத்து கலங்குவது, அவளுக்கு வரும் இழப்புகள் சமயத்தில் அருகில் இருந்து உதவுவது என்று கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.

வருணிகா ஆசை, ஏமாற்றம், விரக்தி என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தி நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார். கால்கள் இழந்தவராக வரும் ரமேஷ் நல்ல நண்பனாக மனதில் நிற்கிறார்.

இமான் அண்ணாச்சி வில்லத்தனமும் நகைச்சுவையும் கலந்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்துள்ளார்.

சஞ்சனா, இளங்கோ, பவித்ரா, சிசர் மனோகர், டாக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோரும் சிறிது நேரம் வந்தாலும் கவனிக்க வைக்கின்றனர்.

திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம்.

ரபி தேவேந்திரன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கே.வி.ராஜன் கேமரா குப்பை மேட்டு காட்சிகளை படமாக்கியதில் உழைத்து இருக்கிறது

ஆதரவற்றவர்களின் வாழ்வியலுடன் காதல், நட்பு, குடும்ப உறவுகளை கோர்த்து சிறந்த படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ராசாவிக்ரம்.

Tags:    

மேலும் செய்திகள்