போலீஸ் அவதாரம் - "தி வாரியர் " சினிமா விமர்சனம்
ஒரு சிறிய இடைவெளிக்குப்பின், லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். இளம் டாக்டருக்கும், தாதாவுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை.
மதுரை நகரையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் தாதா ஆதி பட்டப்பகலில், நடுரோட்டில் ஒருவரை வெட்டி சாய்க்கிறார். வெட்டப்பட்டவரின் பக்கத்தில் போகவே எல்லோரும் பயப்படுகிறார்கள். அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு புதிய டாக்டராக வரும் ராம், ரத்த வெள்ளத்தில் கிடப்பவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது, டாக்டர் ராமுக்கும், தாதா ஆதிக்கும் இடையிலான மோதல்.
இந்த நிலையில், டாக்டர் ராமுக்கும், ரேடியோ ஜாக்கி கீர்த்தி செட்டிக்கும் காதல் மலர்கிறது. ராம் காதலிக்காக காத்திருக்கும்போது, அவரை ஆதி அடித்து உதைத்து குற்றுயிருடன் ஒரு கம்பியில் தொங்க விடுகிறார். அவருக்கு ரகசியமாக சிகிச்சை அளித்து காப்பாற்றுகிறார், சீனியர் டாக்டர் ஜெயப்பிரகாஷ்.
2 வருடங்களுக்குப்பின் ராம் 'ஐ.பி.எஸ்.' படித்து முடித்த போலீஸ் அதிகாரியாக அதே மதுரைக்கு வருகிறார். தாதா ஆதியை ஒழித்துக்கட்டும் ஒரே நோக்கத்தில் புத்திசாலித்தனமாக தனது வேட்டையை தொடங்குகிறார். அவரால் ஆதியை ஒழித்துக்கட்ட முடிந்ததா, இல்லையா என்பது அடிதடியுடன் கூடிய 'கிளைமாக்ஸ்.'
டாக்டர் வேடத்துக்கும், போலீஸ் அதிகாரி வேடத்துக்கும் ராம் கச்சிதமாக பொருந்துகிறார். ஒரு டாக்டராக ரவுடிகளின் அராஜகங்களை கண்டு ஆவேசப்படும் காட்சிகளில் ஆதரவை அள்ளுகிறார். அவர் போலீஸ் அதிகாரியாக வருவது, எதிர்பாராத திருப்பம்.
கீர்த்தி செட்டி, அழகான நாயகி. அவருடைய விசில், ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடுகிறது. ஆதி வில்லனாக மாறியிருக்கிறார். கதாநாயகனாக அவர் சாதிக்காததை வில்லனாக சாதித்து இருக்கிறார். 'வில்லாதி வில்லன்' என்று பட்டம் கொடுக்கிற அளவுக்கு நடிப்பு கொடியை பறக்கவிட்டு இருக்கிறார்.
ராம் பொத்தினேனி, ஆதிகதாநாயகன் ராமின் அம்மாவாக நதியா. மார்க்கெட்டில் வில்லன் ஆதி மிரட்டும்போது பயப்படாமல் எச்சரிக்கும் ஒரு காட்சி போதும். நதியா அனுபவப்பட்ட பழைய கதாநாயகி என்று அடையாளம் காட்டுகிறார்.
கார்-லாரி துரத்தல் காட்சியில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், திறமை காட்டியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அத்தனையும் 'டண்டணக்கா...' பின்னணி இசை, காட்சிகளுக்கு வேகம் கூட்டுகிறது.
லிங்குசாமி டைரக்டு செய்து இருக்கிறார். காரசார மசாலா கதைக்குள் ஜனரஞ்சகம் சேர்த்து விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார். இடைவேளைக்குப்பின் வரும் நீண்ட உரையாடல் காட்சி தேவையா? வில்லனை பழிவாங்க டாக்டர் ஹீரோ போலீஸ் அவதாரம் எடுப்பதும், அந்த லாரி துரத்தல் காட்சியும் 'லிங்குசாமி'யின் முத்திரைகள்.