தெற்கத்தி வீரன்: சினிமா விமர்சனம்

Update: 2022-12-03 18:24 GMT

பணக்கார குடும்பத்தில் பிறந்து ஏழைகளுக்கு ஓடோடி உதவிகள் செய்பவர் நாயகன் சாரத். கடலோர மீனவர்கள் நலனிலும் அக்கறை காட்டுகிறார். அநியாயம் எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்கிறார். அதனால் அவருக்கு சுற்றிலும் பகையாளிகள் பெருகுகிறார்கள். ஒரு கட்டத்தில் விரோதிகள் ஒன்றுகூடி ஒருவரை கொலை செய்து சாரத் மீது கொலைப்பழியை சுமத்தி போலீசில் சிக்கவைக்கின்றனர். போலீஸ் அடித்து துன்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி நிர்ப்பதிக்கின்றனர். குற்றவாளியாக உள்ளே போன சாரத்தால் நிரபாரதி என நிரூபிக்க முடிந்ததா, கொலை பழியிலிருந்து மீண்டாரா என்பது மீதி கதை.

ஆக்‌ஷன் ஹீரோவாக பக்காவாக நடித்திருக்கிறார் நாயகன் சாரத். வில்லன்களுடன் மோதும் அடிதடி காட்சியில் அமர்க்களப்படுத்தி உள்ளார். போலீஸ் சித்திரவதையில் அனுதாபம் பெறுகிறார். மக்கள் நலனுக்காக மேடையில் ஆவேசமாக அரசியல் வசனமும் பேசுகிறார். நாயகி அனகா குடும்பபாங்கான வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். காதல் காட்சிகளிலும் கவர்கிறார்.

நாயகனின் மிடுக்கான தந்தையாக வரும் வேல ராமமூர்த்தி மகன் மீது பாசமழை பொழிகிறார். அமைச்சராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நாயகனின் நண்பனாக வரும் 'முருகா' அசோக் அழுத்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார். வக்கீலாக வரும் உமா பத்மநாபன், 'நாடோடிகள்' பரணி, கபீர் துஹான் சிங், பவன், மது சூதனன், மாரி வினோத், 'குட்டி புலி' ராஜ சிம்மன், ரேணுகா, நமோ நாராயணா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை கச்சிதமாக உணர்ந்து செய்துள்ளனர்.

ஶ்ரீகாந்த்தேவா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை அதிரடியாக கொடுத்துள்ளார். கடலோர மக்களின் வாழ்வியலை அழகாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம். ஆரம்பத்தில் கதை மெதுவாக நகர்கிறது. பின்னர் கலகலப்பும், விறுவிறுப்புமாய் வேகம் எடுத்துள்ளது.

நடிகராக மட்டுமல்லாமல் கமர்சியல் சினிமாவுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கொடுத்து இயக்குனராகவும் தனது பொறுப்பை சரியாக செய்துள்ளார் சாரத்.

Tags:    

மேலும் செய்திகள்