செஞ்சி: சினிமா விமர்சனம்

ஒரு புதையலை தேடிசெல்லும் கதை ”செஞ்சி” பட சினிமா விமர்சனத்தை பற்றி பார்ப்போம்...

Update: 2022-11-17 04:07 GMT

பிரான்சில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனது மூதாதையர் வீட்டுக்கு வரும் கெசன்யா அங்கு ஒரு அறைக்குள் பழைய புராதன கலைப் பொருட்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அவற்றோடு அமானுஷ்யங்களும் இருக்கின்றன. ஒரு ஓலைச்சுவடியை ஆவிகள் சுற்றுகின்றன. அந்த ஓலைச்சுவடியை எடுத்து தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் கணேஷ் சந்திரசேகரிடம் காட்டுகிறார். அவர் ஓலைச்சுவடியை படித்து புதையல் பற்றிய ரகசிய குறிப்புகள் இருப்பதை கண்டுபிடிக்கிறார். ரகசிய குறிப்பு குறியீடுகளை வைத்து புதையலை தேடி புறப்படுகிறார்கள். கண்டுபிடித்தார்களா? என்பது கிளைமாக்ஸ். புதையல் வேட்டையாக தொடங்கும் கதையில் இரண்டு கிளைக்கதைகளும் வருகின்றன.

கிராமத்தில் ரகளை செய்யும் ஐந்து சிறுவர்களால் அவர்கள் குடும்பத்தினரை ஊரை வீட்டே ஒதுக்கி வைக்கின்றனர். இதனால் பெற்றோர் கண்டிப்புக்கு உள்ளாகும் அந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறி காட்டுக்குள் செல்கிறார்கள். பயங்கரவாதிகள் சிலரும் துப்பாக்கியுடன் காட்டில் சுற்றுகின்றனர். அவர்களை பிடிக்க அதிரடி படை காட்டுக்குள் இறங்குகிறது. இந்த மூன்று கதைகளையும் ஒரு புள்ளியில் இணைக்கும்போது திருப்பம்.

கெசன்யா சகுன தடைகளை மீறி பாழடைந்த வீட்டுக்குள் நுழைவதும் அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களும் பயமுறுத்துகின்றன. புதையல் தடயங்களை தேடி பயணிக்கும்போது எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த சிறுவர்களை புதையல் வேட்டையோடு கொண்டு இணைப்பது நேர்த்தி. தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வரும் கணேஷ் சந்திரசேகர் கதாபாத்திரத்தில் நிறைவு. மலைமுகடுளில் ஏறி இறங்கி சாகசமும் சண்டையும் செய்கிறார். இவரே டைரக்டும் செய்துள்ளார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் பேசுவதை தவிர்த்து இருக்கலாம். பிரான்சு பெண்ணாக வரும் கெசன்யா கதையோடு ஒன்றுகிறார். முதல் பாதி திரைக்கதை மெதுவாக நகர்கிறது. காட்டுக்குள் கதை நகர்ந்ததும் பயங்கரவாதிகள், கொலை, போலீஸ் என்று விறுவிறுப்புக்கு மாறுகிறது. வி.முத்து கணேஷ் இசையில் சிறுவர்கள் பாடும் தங்கம் பாடல் கவர்கிறது. செஞ்சி கோட்டை, பாறைகள். பச்சை பசேல் காடுகள், பாறைகளின் சந்து பொந்து என்று ஹரிஷ் ஜிண்டே கேமராவில் உழைப்பு தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்