ரீ : சினிமா விமர்சனம்
சிறுவயதில் தான் சந்தித்த ஒரு சம்பவத்தால் மன அழுத்தத்திற்கு ஆளான ஒரு பெண்ணின் மனநிலையையும், ஒரு சிறுமியின் இறப்புக்கு நாம்தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சியால் அழுத்தப்பட்ட இன்னொரு பாத்திரத்தின் மனப்பிறழ்வையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது, கதை.;
ரீனா என்கிற பிரதான பாத்திரத்தின் முதல் எழுத்தாக படத்துக்கு 'ரீ' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் உளவியல் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் மனோதத்துவ டாக்டர் முகில். அவரது மனைவி ரீனா. இளம் தம்பதிகளான இருவரும் புதிதாக ஒரு வீடு வாங்கி, குடி போகிறார்கள். பக்கத்து வீட்டில் ஏதோ பெண்ணின் அலறல் ஒலி கேட்பதாக டாக்டர் கணவரிடம் தினமும் புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறாள், ரீனா. அது ஒரு மாயையாக இருக்கலாம். அது வீண் கற்பனையே தவிர நிஜமல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார். டாக்டர். மனைவியோ அதை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார். கணவர் நம்பாதவராக இருக்கிறார். இருவரும் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மனைவி முறையீட்டுக்குச் செவி கொடுக்கிற டாக்டர் முகில், களத்தில் இறங்கி ஆய்வு செய்கிறார். பக்கத்து வீட்டில் பிரச்சினை இருப்பது தெரிகிறது.
அங்கு குடியிருக்கும் இன்னொரு டாக்டர் சாகுல் வீட்டில் இருந்துதான் அலறல் ஒலி கேட்கிறது. மெல்ல அந்த வீட்டிற்குள் நுழைந்து விசாரிக்கிறார் முகில். அங்கே டாக்டர் சாகுல் பெரும் மனப்பிறழ்வுக்கு ஆளாகியிருப்பது தெரிகிறது. அவரிடம் நெருங்க நெருங்க அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. தான் செய்த அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்த தன் மகளை வீட்டுக்குள் பிணமாகப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து முகிலுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. குற்ற உணர்ச்சிக்கு ஆளான மனசு, ஜான்சன் என்கிற இன்னொரு பாத்திரமாக உருவெடுத்து அவரை கொடுமைப்படுத்துவதாகக் கண்டுபிடிக்கிறார்.
அவருக்குள் மறைந்திருந்த அந்தப் பழிவாங்கும் பாத்திரத்தை, சிகிச்சை மூலம் வெளிக்கொண்டு வந்து சாகுலை எப்படி முகில் மீட்கிறார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் மனோதத்துவ நிபுணராக பிரசாந்த் சீனிவாசன் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். நடிப்பில் இன்னும் சில படிகள் ஏற வேண்டும். அவரது மனைவியாக காயத்ரி ரமா நடித்திருக்கிறார். பயந்து அலறும் முக பாவனைகளை தெளிவாக காட்டியுள்ளார்.
டாக்டர் சாகுலாக பிரசாத் வருகிறார். பார்க்க சாதுவாக இருப்பதும் இறந்து போன தன் மகளின் நினைவு வந்ததும் மனப்பிறழ்வு காட்டும் மனநோயாளியாக மாறுவதும் நடிப்புக்கு நல்ல வாய்ப்பு. டாக்டர் சாகுலிடம் இருந்து குற்ற உணர்ச்சியாக வெளிப்படும் ஜான்சன் பாத்திரத்தில் இயக்குனர் சுந்தரவடிவேல் நடித்துள்ளார். தண்டனை...தண்டனை... என்று வீராவேசத்துடன் கூறிக்கொண்டு பழிவாங்கத் துடிக்கிற அந்த பாத்திரத்தில் அசல் மனநோயாளியாகவே தெரிகிறார். படத்தின் முதல் பாதி வழக்கம் போல காதல், பாடல்கள் என்று நகர்கிறது. அழுத்தமான காட்சிகள் இல்லாமல், அலுப்பூட்டுகிறது இரண்டாம் பாதி அதற்கு நேர் மாறாக செல்கிறது. திடீர் திருப்பங்கள் வருகின்றன. பேய் படமா, சைக்கோ படமா என்பதற்கு பதில் கிடைக்கிறது. யாருக்கு என்ன பிரச்சினை என்று யூகிக்க முடியாத அளவிற்கு சஸ்பென்ஸ் காப்பாற்றப்படுகிறது.
இசையமைப்பாளர் தினாவின் தம்பி ஹரிஜி பாடல்களில் பழைய நெடி அடிக்கிறது. பின்னணி இசை பெரிய பலமாகப் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.