பிரியமுடன் பிரியா: சினிமா விமர்சனம்

Update: 2023-08-09 05:53 GMT

ரேடியோவில் ஆர்.ஜே.வாக வேலை பார்க்கும் லீஷா தொகுத்து வழங்கும் பிரியமுடன் பிரியா நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். திருமணம் செய்து கொள்வதற்காக அந்த நிகழ்ச்சியை நிறுத்த லீஷா முடிவு செய்கிறார்.

கடைசிநாள் அவர் பணிக்கு செல்லும்போது நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது என்று அசோக்கிடம் இருந்து மிரட்டல் கடிதம் வருகிறது. அதை பொருட்படுத்தாமல் இறுதி நாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகும்போது அவரது வீட்டுக்குள் அசோக் நுழைகிறார். பிரியாவின் அக்காவை அடித்து கட்டிப் போடுகிறார். குழந்தைகளையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து பிரியாவிடம் செல்போனில் தொடர்பு கொள்கிறார்.

அக்கா நிலைமையை பார்த்து பிரியா பதறுகிறார். அசோக் மிரட்டலுக்கு பணிந்து அவர் சொல்வதை கேட்கிறார். அசோக் பிடியில் இருந்து லீஷா விடுபட்டாரா? அக்காள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றினாரா? அசோக் பின்புலம் என்ன என்பது மீதி கதை…

அசோக்குக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை ரசித்து செய்து இருக்கிறார். ஆதரவற்ற தனது இயலாமை நிலையை விளக்குவது? லீஷா குரலுக்கு மதி மயங்கி கிடப்பது, தன்னை பிடிக்க வரும் போலீசாரை ஆவேசமாக தாக்கி கொலை செய்வது என்று திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார். ரேடியோ ஆர்.ஜே.வாக வரும் லீஷாவுக்கு கதையை தாங்கும் முக்கிய கதாபாத்திரம். அதில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சுரேஷ் அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார். ஏ.வெங்கடேஷ், தலைவாசல் விஜய், சுரபி ஜீவா ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் கதை மெதுவாக நகர்ந்து பின்னர் வேகம் எடுக்கிறது.

ஷா ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளது. ஶ்ரீகாந்த் தேவா கதைக்கு தேவையான இசையை வழங்கி இருக்கிறார். சைக்கோ இளைஞனிடம் சிக்கிய இளம் பெண்ணின் தவிப்புகள், அதில் இருந்து மீள நடத்தும் போராட்டம் என வித்தியாசமான கதைக்களத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஏ.ஜே.சுஜித்.

Tags:    

மேலும் செய்திகள்