பொன்னியின் செல்வன் : சினிமா விமர்சனம்

இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மணிரத்னம் படம். 70 வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் வெளிவந்த வரலாற்று நாவல் இப்போது படமாகி இருக்கிறது.

Update: 2022-10-01 06:40 GMT

சோழ சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி சுந்தர சோழன் (பிரகாஷ்ராஜ்) உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்கு ஆதித்த கரிகாலன் (விக்ரம்), அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி) என்ற 2 மகன்கள். குந்தவை (திரிஷா) என்ற ஒரே ஒரு மகள்.

கரிகாலன் காஞ்சிபுரத்திலும், அருள்மொழி வர்மன் இலங்கையிலும் இருக்கிறார்கள். சுந்தர சோழரின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருக்கும் பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) உறவினர் மதுராந்தக சோழர் (ரகுமான்)க்கு முடிசூட்ட சதி செய்கிறார். அவருடைய இளம் மனைவி நந்தினி (ஐஸ்வர்யா ராய்) கரிகாலன் மீதான பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு அந்த சதிக்கு உடந்தையாக இருக்கிறார். கரிகாலனின் நண்பன் வந்திய தேவன் சாளுக்கிய மரபினன். சுந்தர சோழரின் மகள் குந்தவை (திரிஷா)வை காதலிக்கிறார். சோழ பேரரசுக்கு எதிரான சூழ்சிகளை முறியடிப்பவர் இவர்தான்.

பெரிய பழுவேட்டரையரின் சதித்திட்டம் நிறைவேறியதா, இல்லையா? என்பது பின்பகுதி கதை.

ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் மிக சரியான தேர்வு. தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். வந்தியதேவனாக கார்த்தி படம் முழுக்க வருகிறார். படத்தில் அவ்வப்போது கலகலப்பூட்டுபவர் இவர் தான். சண்டை காட்சிகளிலும் கார்த்தி புகுந்து விளையாடியிருக்கிறார். படத்தின் பின்பகுதியில் கதையை நகர்த்துபவர் ஜெயம் ரவி. பெரிய பழுவேட்டரையராக வரும் சரத்குமார் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். கதையில் திருப்பமான கதாபாத்திரம் இவருடையது தான். இவருடைய தம்பியாக பார்த்திபன், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாபாத்திரம். பெரிய வேளாளராக பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார்கள். வீரபாண்டியனாக நாசர் வருகிறார்.

குந்தவை கதாபாத்திரத்தில் வரும் திரிஷா நடிப்பிலும், தோற்றத்திலும் பளிச் என்று இருக்கிறார். நந்தினி கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார், ஐஸ்வர்யா ராய். படத்தில் சுவாரஸ்யமான மற்றொரு கதாபாத்திரத்தில், ஜெயராம். ஐஸ்வர்ய லட்சுமி படகோட்டியாக வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 2 பாடல்கள், 'ஹிட்', பின்னணி இசை, வேகமான கதை யோட்டத்துக்கு உதவி இருக்கிறது. படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவு என்று சொல்லும் வகையில், ரவிவர்மன் திறமையை காட்டியிருக்கிறார். டைரக்டர் மணிரத்னம் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். படத்தின் இறுதியில் வரும் படகு சண்டை காட்சியில், மணிரத்னம் மிரட்டல்.

Tags:    

மேலும் செய்திகள்