பொன்னியின் செல்வன் 2 : சினிமா விமர்சனம்

Update: 2023-04-29 03:11 GMT

முதல் பாகத்தின் இறுதியில் படகுடன் கடலுக்குள் மூழ்கிய அருள்மொழி வர்மனாகிய ஜெயம் ரவி இரண்டாம் பாகத்தில் உயிர் ஊசலாடும் நிலையில் மீட்கப்படுவது போன்றும், ஆதித்த கரிகாலன் நந்தினியின் இளமை கால காதல் பிளாஷ்பேக்கோடும் எதிர்பார்ப்போடு கதை தொடங்குகிறது.

உயிருக்கு போராடும் ஜெயம் ரவியை வந்தியத்தேவனாகிய கார்த்தி புத்த மடாலயத்துக்கு அனுப்பி ரகசியமாக சிகிச்சை பெற வைக்கிறார். ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம், குந்தவையாக வரும் திரிஷா உள்ளிட்ட சோழ தேசத்தினர் ஜெயம்ரவி இறந்து விட்டதாக துக்கப்பட்டு நிற்கின்றனர். அவர்களுக்கு ஜெயம் ரவி உயிருடன் இருக்கும் தகவலை கார்த்தி தெரியப்படுத்துகிறார்.

இன்னொரு புறம் சுந்தர சோழனாகிய பிரகாஷ்ராஜ், இளவரசர்கள் விக்ரம், ஜெயம்ரவி ஆகியோரை பாண்டியர்களை வைத்து ஒரே நேரத்தில் தீர்த்து கட்ட நந்தினியாகிய ஐஸ்வர்யாராய் சதி செய்கிறார்.

மதுராந்தகராக வரும் ரகுமானை சோழ மன்னராக முடிசூட்ட வைக்க பெரிய பழுவேட்டரையராக வரும் சரத்குமாரும், சிற்றரசர்களும் முயற்சிக்கிறார்கள்

பகைவர்களால் சோழ சாம்ராஜ்யத்தை வீழ்த்த முடிந்ததா, சோழ பேரரசின் அரியணையை அடைய துடிக்கும் ரகுமானின் ஆசை நிறைவேறியதா? என்பது மீதி கதை.

சோழ சாம்ராஜ்யத்தின் வானுயர்ந்த கோட்டை மதிலுடன் கூடிய அரண்மனை, போர் காட்சிகள், வாள் சண்டைகள், பாய்மர கப்பல்கள் என முதல் பாகத்தை போலவே இந்த பாகமும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறது.

விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் கடம்பூர் அரண்மனையில் சந்திக்கும் காட்சிகளும், பேசுகின்ற வசனங்களும் ரசிகர்கள் மனதை விட்டு அகல நெடுங்காலம் பிடிக்கும். அந்த அளவுக்கு உயிர்ப்பானவை.

ஆதித்ய கரிகாலனாக என்னைவிட யார் சிறப்பாக நடித்துவிட முடியும் என்று மார்த்தட்டுகிறார் விக்ரம். நட்பு, சகோதர பாசம், காதலுக்காக உயிரைக் கொடுக்கும் துணிவு என படம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் விக்ரமின் நடிப்பு அபாரம்.

சோழ அரசை பழிவாங்கும் வெறியை காட்சிக்கு காட்சி கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் ஐஸ்வர்யா ராய். அவர் பேசும் வசனங்களாகட்டும், அலட்சியம் கலந்த பார்வையாகட்டும், காதலை சொல்லத்துடிப்பதாகட்டும் எல்லாமே அடேங்கப்பா ரகம்.

அருள்மொழி வர்மனாக வரும் ஜெயம் ரவி கம்பீர நடை, பெருந்தன்மை என பேரரசனுக்குரிய மாண்புகளை மிக அழகாக தன்னுடைய உடல் மொழியாலும், வீரத்தாலும் வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

வந்தியதேவனாக வரும் கார்த்தி ஆல்ரவுண்டர் வீரர் போல் சகல இடத்திலும் வந்து அசத்தியிருக்கிறார்.

குந்தவையாக வரும் திரிஷா இளவரசி கேரக்டருக்கு ஏற்ப இளமையாக ஜொலிக்கிறார். கத்திமுனையில் கார்த்தியை மடக்கினாலும் காதலில் மடங்குவது, கண்களால் காதல் மொழி பேசுவது என குந்தவை கதாபாத்திரத்துக்கு குந்தகம் வராமல் பார்த்துகொள்கிறார்.

பார்த்திபேந்திர பல்லவனாக வரும் விக்ரம் பிரபுவுக்கு கனமான வேடம். அதை கெட்டியாக பிடித்து நன்றாகவே திறமை காட்டியுள்ளார்

பெரிய பழுவேட்டரையராக வரும் சரத்குமார் அனுபவ நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மதுராந்தகராக வரும் ரகுமான், சேனாதிபதியாக வரும் பிரபு, அரண்மனை பாதுகாப்பு அதிகாரியாக வரும் பார்த்திபன், பாண்டியனாக வரும் நாசர், ஆழ்வார்க்கடியானாக வரும் ஜெயராம், பாண்டிய ஆபத்து உதவியாக வரும் ஆடுகளம் கிஷோர், சமுத்திர குமாரியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி, வானதியாக வரும் ஷோபிதா துலிபாலா என அனைவரும் அலட்டல் இல்லாத நடிப்பை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

வில்லத்தனம் செய்தவர்கள் கிளைமாக்சில் திடீர் நல்லவர்களாக மாறுவது உறுத்தல்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'அகநக' பாடல் ஒன்ஸ்மோர் ரகம். பின்னணி இசையில் செவிக்கு விருந்து படைத்துள்ளார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு அற்புதம். நாயகர்கள், நாயகியர்கள் கண்ணோடு கண் காண்பது, மூக்கோடு மூக்கு உரசுவது என கேமராவுக்குள் வசியம் செய்துள்ளார்.

ஒவ்வொரு காட்சியும் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. பிரமாண்டத்தை ரசிப்பதா, கதாபாத்திரங்களை ரசிப்பதா? என ரசிகர்களுக்கு இருமடங்கு விருந்து படைத்திருக்கிறார் மணிரத்னம். எக்காலமும் பேசப்படும் ஒரு சரித்திர நாவலை இன்றைய தலைமுறைக்கு காட்சி வடிவத்தில் நேர்த்தியாக கொடுத்தமைக்காக அவரை பாராட்டலாம்.

Tags:    

மேலும் செய்திகள்