நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்: சினிமா விமர்சனம்

Update: 2022-12-10 04:27 GMT

நாய்களை கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் வேலையை செய்கிறார் வடிவேல். ஆட்களை கடத்தும் பெரிய தாதாவான ஆனந்தராஜின் நாயையும் தவறுதலாக காருடன் சேர்த்து கடத்தி விடுகிறார். நாய் இருந்த அந்த காரில் பல கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியாமலேயே ஆனந்தராஜிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். ஆனந்தராஜின் காரை அடகும் வைத்து விடுகிறார். தன்னுடைய நாயையும் காரையும் திருப்பித் தருமாறு வடிவேலுவை ஆனந்தராஜ் மிரட்டுகிறார்.

இதற்கிடையே வடிவேலுவின் குடும்பம் செல்வ செழிப்பான குடும்பம் என்றும் அந்தச் செழிப்புக்கு காரணம் அவர்கள் வளர்த்த ஒரு அதிர்ஷ்டக்கார நாய்தான் என்றும் வடிவேலுடைய பாட்டி சச்சு தெரிவிக்கிறார். அந்த நாயை தன்னுடைய வீட்டில் வேலை செய்த வேலைக்காரர் திருடிச் சென்று இப்போது வசதி வாய்ப்புகளோடு இருப்பதாக பாட்டி மூலம் அறியும் வடிவேலு அதை தேடி செல்கிறார்

தங்கள் குடும்பத்தின் அதிர்ஷ்ட நாயை வடிவேலு கண்டுபிடித்தாரா, ஆனந்தராஜின் மிரட்டலை சமாளிக்க முடிந்ததா? என்பது மீதி கதை.

கதாநாயகனாக வரும் வடிவேலு நாய்களை திருடுவது, உரிமையாளர்களிடம் சிக்கி அடிவாங்குவது, நக்கல் நய்யாண்டி செய்வது என்று தனது பாணியில் சிரிக்க வைக்கும் வேலையை மிக சரியாக செய்து இருக்கிறார். உடல்மொழியும் ரசிக்க முடிகிறது

சிரிப்பு வில்லனாக வரும் ஆனந்தராஜ் தனது அனுபவ நடிப்பால் அவர் ஏரியாவை கலகலப்பாக நகர்த்த வைக்கிறார். ரெடின் கிங்ஸ்லி வரும்போதெல்லாம் பார்வையாளர்கள் உற்சாகமாகி சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

சச்சு, பூச்சி முருகன், ராவ் ரமேஷ், மனோபாலா, முனீஸ் காந்த், ஷிவானி, சிவாங்கி ஆகியோர் கதையை தொய்வில்லாமல் நகர்த்துவதற்கு உதவுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு காட்சிகளை 'கலர்புல்லாக' படம் பிடித்து கண்களுக்கு விருந்து படைக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பலம்

சில காமெடி காட்சிகள் சிரிப்பை தராமலேயே கடந்து போவது குறை.

நாய்களை கடத்தும் நாயகனை மையமாக வைத்து குடும்பத்தோடு ரசிக்கும்படி நகைச்சுவையாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுராஜ்.

Tags:    

மேலும் செய்திகள்