கிராமத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடி வெட்டி பந்தா வாழ்க்கை நடத்துகிறார் விஷ்ணு விஷால். பெற்றோர் இல்லாத அவருக்கு அப்பா ஸ்தானத்தில் இருக்கும் மாமா கருணாஸ் திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார். தனக்கு வரப்போகும் மனைவி தன்னைவிட குறைவாக படித்திருக்க வேண்டும், நீளமான தலைமுடி இருக்க வேண்டும், கீழ்படிந்து நடக்க வேண்டும் என்றெல்லாம் விஷ்ணு விஷால் நிபந்தனை விதிக்கிறார். கேரளாவில் அதிகம் படித்த குஸ்தி வீராங்கனை ஐஸ்வர்யா லட்சுமியை பெண் பார்க்க விஷ்ணு விஷாலும், அவருடைய உறவினர்களும் கிளம்புகிறார்கள். விஷ்ணு விஷாலின் எதிர்பார்ப்புக்கு தோற்றத்திலும் சரி, குணத்திலும் சரி நேர் எதிராக இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. உண்மையைச் சொன்னால் திருமணம் நடக்காது என்பதால் ஐஸ்வர்யா லட்சுமியின் குடும்பத்தார் கொஞ்சம் பொய் பேசி சம்பந்தம் பேசி முடிக்கிறார்கள்.
இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும் கணவன், மனைவிக்கிடையே எதிர்பார்த்த மாதிரியே பிரச்சினை வருகிறது. விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யா லட்சுமியும் பிரிந்து வாழ்கிறார்கள். அது என்ன பிரச்சினை? பிரிந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்ததா என்பது மீதி கதை.
நாயகியிடம் நாயகன் தோற்க வேண்டும் என்ற கதையை தேர்வு செய்ததற்காகவே விஷ்ணு விஷாலை பாராட்ட வேண்டும். மனைவியின் அழகில் சொக்குவது, பிறகு தனக்கு பணிந்து போகும்படி மிரட்டுவது, குழைவது, மனைவியை பிரிந்த பிறகு சோகத்தை வெளிப்படுத்துவது என காட்சிக்கு காட்சி உணர்ச்சிகளை கொட்டி நடித்திருக்கும் விஷ்ணு விஷாலின் மிகையில்லாத நடிப்பு சூப்பர் ரகம். சண்டை காட்சிகளிலும் பொறி கிளப்புகிறார்.
கட்டா குஸ்தி தன் மீதுதான் கட்டப்பட்டுள்ளது என்பதை புரிந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. இந்தப் படத்துக்காக குஸ்தி வீராங்கனை மிடுக்குக்கு தன்னை மாற்றிக்கொள்ள அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் நன்றாகவே கைக்கொடுத்துள்ளது. குறிப்பாக தனது தங்கையை கேலி செய்தவர்களை ஓடஓட விரட்டி நையப்புடைப்பது கணவனை தாக்க வரும் ரவுடிகளை அடித்து பந்தாடுவது கைதட்ட வைக்கிறது.
வீராப்பு காட்டும் மாமன் ரோலில் மிரட்டியுள்ளார் கருணாஸ். பெண்கள் பற்றி அவர் பேசும் வசனங்கள் ரகளை. ரெடின் கிங்ஸ்லி, காளிவெங்கட், முனீஸ்காந்த் கூட்டணி சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள். நாயகியின் அப்பாவாக வரும் கஜராஜ், அம்மாவாக வரும் ஸ்ரீஜா, உள்ளூர் கட்டா குஸ்தி பயிற்சியாளராக வரும் ஹரீஷ் பேரடி என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து மனதில் நிற்கின்றனர்.
ரிச்சர் எம்.நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. பின்னணி இசையும் பிரமாதம்.
கணவன், மனைவி குஸ்தி சண்டை காட்சிகள் வேகத்தடையாக உள்ளன.
பெண்களின் திறமையை மட்டம் தட்டாமல் ஊக்குவியுங்கள் என்று சமூக அக்கறையுடன் கலகலப்பும், விறுவிறுப்புமாக படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.