லவ் டுடே : சினிமா விமர்சனம்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கும் ”லவ் டுடே” படத்தின் சினிமா விமர்சனத்தை பார்ப்போம்..

Update: 2022-11-08 04:05 GMT

ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரதீப் ரங்கநாதனும், இவனாவும் காதலிக்கிறார்கள். காதல் இவானாவின் தந்தை சத்யராஜுக்கு தெரியவர அவர் இருவரும் தங்கள் செல்போனை ஒரு நாள் மட்டும் மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இருவர் உறவும் சுமுகமாக இருந்தால் திருமணத்துக்கு சம்மதிக்கிறேன் என்று நிபந்தனை விதித்து செல்போனையும் பிடுங்கி மாற்றி கொடுத்து விடுகிறார். இருவரது செல்போனுக்குள் இருந்தும் பூகம்பம் கிளம்ப அங்கு ஒளிந்திருக்கும் ரகசியங்களையும், விளைவுகளையும் படம் பேசுகிறது. இருவரும் சேர்ந்தார்களா என்பது கிளைமாக்ஸ். பிரதீப் ரங்கநாதன் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப உடல்மொழியை கொடுத்து கதாபாத்திரத்தில் ஒட்டிக்கொள்கிறார்.

தனது செல்போன் காதலி கைக்கு மாறியதும் பதறுவது நண்பர்கள் உதவியோடு அதில் இருக்கும் விவகாரமான வீடியோக்களை அழிக்க துடிப்பது சிரிக்க வைக்கும் சுவாரஸ்யங்கள், காதலி தந்தையிடம் ஆரம்பத்தில் பவ்யமாக பணிந்து பேசுவது பிறகு மகளின் நடத்தையை கேலி செய்து அவரிடமே திமிர்த்தனம் காட்டுவது ஆரவாரம். இறுதியில் தாயிடம் துக்கங்களை இறக்கி வைக்கும் காட்சியில் நடிப்பின் உச்சம் தொடுகிறார். இவானாவுக்கு காதலி என்பதை தாண்டி நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்துள்ளார். யோகிபாபு வழக்கமான நகைச்சுவையோடு இன்னொரு பரிமாணம் காட்டி உள்ளார்.

செல்போனை மறைப்பதற்காக அவர் சொல்லும் உருவ கேலி காரணம் நெகிழ வைக்கிறது. யோகிபாபுவுக்கு நிச்சயித்த ரெவீனா ரவிக்கு ஏற்படும் கோபம் பிறகு யோகிபாபு மீது வரும் நம்பிக்கை திரைக்கதைக்கு மேலும் வலுசேர்க்கிறது. நாயகியின் தந்தையாக வரும் சத்யராஜ், நாயகனின் தாயாக வரும் ராதிகா ஆகியோர் அனுபவ நடிப்பால் கதாபாத்திரங்களை மெருகேற்றி இருக்கிறார்கள். பைனலி பாரத், ஆதித்யா கதிர், அஜித் காலிக் என அத்தனை பாத்திரங்களும் நேர்த்தி. நேரடி ஆபாச வசனங்கள் நெளிய வைக்கிறது. அவற்றை தவிர்த்து இருக்கலாம். செல்போன் யுகத்தில் இருக்கும் காதல் சிக்கல் சந்தேகங்களை உணர்வுப்பூர்வமாகவும், கலகலப்பாகவும் காட்சிப்படுத்தி தன்னை திறமையான டைரக்டராக அடையாளப்படுத்தி உள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

கதாநாயகனாகவும் இவரே நடித்து இருப்பதால் உடல்மொழி கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. மண்ணுக்குள் புதைத்த மாங்கொட்டை இன்னும் வளரவில்லையே என்று அடிக்கடி தோண்டி பார்க்கும் சிறுவனையும், கிளைமாக்சில் அது பெரிய மரமாய் நின்று நம்பிக்கையை சொல்வதையும் காட்டுவது டைரக்டரின் இன்னொரு முத்திரை. சில இடங்களில் இவரது நடிப்பில் தனுஷ் சாயல் தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவும் காட்சிகளில் ஒன்றவைக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்