லவ் : சினிமா விமர்சனம்

Update:2023-07-31 12:51 IST

சொந்த தொழில் செய்து நஷ்டமடையும் பரத்துக்கும் வசதியான குடும்பத்தை சேர்ந்த வாணி போஜனுக்கும் திருமணம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் வாணிபோஜன் குடும்பத்தினர் தன்னை அவமதிப்பதாக பரத்துக்கு தாழ்வு மனப்பான்மை வருகிறது.

மனைவி குடும்பத்தினர் பரிசாக தரும் வீட்டையும் வேண்டா வெறுப்பாக பெற்றுக்கொள்கிறார். இதன் தொடர்ச்சியாக பரத், வாணிபோஜன் இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு கொள்கிறார்கள். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற வாணிபோஜனை பரத் கொலை செய்கிறார். பிணத்தை மறைக்கவும் முயற்சிக்கிறார்.

அப்போது எதிர்பாராத விருந்தாளிகளாக இரண்டு நண்பர்கள் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களும் பரத்துக்கு உதவும் வகையில் கொலையை மறைக்க முயற்சி செய்கிறார்கள். அப்போது திடீரென நண்பர்கள் காணாமல் போகிறார்கள். கொலை செய்யப்பட்ட வாணிபோஜன் உயிருடன் வருகிறார்.

நண்பர்கள் எப்படி மாயமானார்கள், உண்மையிலேயே கொலை செய்யப்பட்டவர் யார்? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

பரத் இளமையாக இருக்கிறார். மனைவியிடம் சண்டையிடும் காட்சிகளில் நிஜ கணவன்களின் அணுகுமுறையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். காதல், கோபம், ஈகோ, வெறி என்று தேவையான அனைத்து உணர்வுகளையும் முகத்தில் கச்சிதமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் மனைவி வேடத்தில் அசத்தியுள்ளார் வாணிபோஜன். கணவனுடன் சண்டையிடும்போது வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து ஆவேசம் காட்டி உள்ளார்.

ராதாரவி சிறிது நேரம் வந்தாலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார். விவேக் பிரசன்னா, டேனி இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம்.

ஒரே இடத்தில் கதை நடந்தாலும் வித்தியாசமான கேமரா கோணங்கள், விஷுவல்ஸ் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.

ரோனி ரெபலின் இசை கதையை நகர்த்த உதவி செய்துள்ளது.

கணவன், மனைவிக்கிடையே இருக்கும் மனஸ்தாபங்கள், ஈகோ பிரச்சினைகள் எப்படி குடும்பத்தை சீரழிக்கிறது என்பதை திரில்லர் கதையம்சத்தில் நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கி உள்ளார் இயக்குனர் ஆர்.பி.பாலா. கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.

Tags:    

மேலும் செய்திகள்