சினிமா விமர்சனம்: லால் சிங் சத்தா
அமீர்கானின் மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் படம். ஹாலிவுட்டில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற பாரஸ்ட் கம்ப் படத்தின் ரீ - மேக்.
லால் சிங் சத்தா (அமீர்கான்) ஓடும் ரெயில் பயணத்தின்போது, சக பயணிகளிடம் தனது கதையை சொல்வது போல் படம் ஆரம்பிக்கிறது. சிறு வயதில், அவருடைய ஊனமுற்ற வித்தியாசமான உருவத்தைப் பார்த்து மற்ற சிறுவர்கள் கேலி செய்கிறார்கள். கல்லால் அடிக்கிறார்கள். அதற்கு பயந்து லால் சிங் ஓடுகிறான். அந்த ஓட்டமே அவனை ஊக்குவிக்கிறது. அவனுடைய ஊனம் குணமாகிறது. அவனை ஓட்டப்பந்தய வீரனாக உயர்த்துகிறது.
பக்கத்து வீட்டு சிறுமி ரூபா மீது அவனுக்கு சின்ன வயதில் ஏற்பட்ட ஈர்ப்பு, வாலிபர் ஆனபின் காதலாக தொடர்கிறது. அவளுக்கும் லால் சிங்கை பிடிக்கிறது. என்றாலும் அவளுக்கு சினிமா கதாநாயகி ஆகவேண்டும் என்பது கனவு. அதற்காக முயற்சிக்கிறாள். லால் சிங் ராணுவத்தில் சேர்கிறார். ரூபா, சினிமாவில் நடிக்க தயாராகிறார். இருவரும் மறுபடியும் சந்தித்தார்களா, அவர்களின் காதல் என்னவாகிறது? என்பது மீதி கதை.
ஆமீர் கான், நாக சைதன்யாலால் சிங் சத்தாவாக அமீர்கான் படம் பார்ப்பவர்களுக்குள் ஆழமாக பதிந்து விடுகிறார். வெள்ளை மனம் கொண்ட சிறுவனாக, இளைஞராக, முரடராக, நட்புக்கு இலக்கணமாக, நல்ல காதலராக பன்முகம் காட்டி, இந்திய திரையுலகின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
அவருடைய காதலியாக கரீனா கபூர், அமீர்கானுக்கு ஈடுகொடுத்து நடித்து இருக்கிறார். ராணுவ நண்பராக நாக சைதன்யா வருகிறார். அம்மாவாக மோனாசிங், தாய்பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில், நெகிழவைக்கிறார்.
அமீர்கான்-கரீனா கபூர் கான் தொடர்பான காட்சிகளில், இசையமைப்பாளர் தனுஷ் டிக்குவின் பின்னணி இசை காதல் கவிதையாக மனதை வருடுகிறது. போர்க்கள காட்சிகளில், சத்யஜித் பாண்டேயின் ஒளிப்பதிவு பதற்றம் கூட்டுகிறது.
ஒரு இளைஞனின் சுயசரிதைக்குள் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்த சம்பவம், இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டது, மும்பை நட்சத்திர ஓட்டலுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்தது, கார்கில் போர் போன்ற பரபரப்பான சம்பவங்களை புகுத்தி, திரைக்கதைக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார், டைரக்டர் அத்வைத் சந்தன். படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.