தொழில் அதிபர் ராம்கியின் ஐந்து கோடி ரூபாய் திருட்டு போகிறது. அந்த பணத்தை திருடியவர்கள் மறைத்து வைக்கின்றனர். பணத்தை கண்டு பிடித்து தரும்படி ராம்கி போலீசில் புகார் செய்கிறார். ஆனால் அந்தப் பண பெட்டி அடுத்தடுத்து பலரது கைக்கு மாறுகிறது. பணத்தை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி நட்ராஜ் விசாரணையில் இறங்குகிறார். அவர் தொலைந்து போன பணத்தை கண்டுபிடித்தாரா? குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பது மீதி கதை.
இன்ஸ்பெக்டர் வேடத்துக்கு நூறு சதவீதம் நியாயம் செய்துள்ளார் நாயகன் நட்ராஜ். நிஜ போலீஸ் அதிகாரி போன்று கேரக்டராகவே மாறி நடித்துள்ள அவரது மெனக்கெடல் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. கடமை என்று வந்த பிறகு மனைவி, குடும்பம் என இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் சோகம் மனதைத் தொடுகிறது.
நாயகி பூனம் பாஜ்வா மனைவி கதாபாத்திரத்தில் நிறைவு. பிரசவ வலியால் துடிப்பது, கணவனின் அருகாமைக்காக ஏங்குவது என்று நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார். பாடல் காட்சியில் அறைகுறை உடையில் கவர்ச்சியை தெளிக்கிறார்.
ராம்கி கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். சீனியர் நடிகரான அவருக்கு இன்னும் சில காட்சிகள் வைத்திருக்கலாம்.
மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ரவிமரியா, ஜார்ஜ் ஆகியோரின் பங்களிப்பு படத்தை கலகலப்பாக நகர்த்த உதவுகிறது.
சஞ்சனாசிங், அஸ்மிதா இருவரும் போட்டிப்போட்டு பாடல்காட்சியில் கவர்ச்சி விருந்து படைக்கிறார்கள்.
தேவராஜின் ஒளிப்பதிவில் மலையும் மலை சார்ந்த இடங்களும் பசுமையாக இருக்கிறது.
சத்ய தேவ் உதய் சங்கர் இசையில் பாடல்கள் கதையின் வேகத்துக்கு உதவுகிறது. ஏராளமான நட்சத்திர பட்டாளம் இருந்தும் திரைக்கதையில் பலகீனம் தெரிகிறது.
பணம் பத்தும் செய்யும் என்ற ஒற்றை வரியை கையில் எடுத்துக்கொண்டு கமர்சியல் சினிமா கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் தனசேகர்.