சினிமா விமர்சனம்: பிகினிங்

Update: 2023-01-28 06:01 GMT

பிளவு திரையில் இரு வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய படம்.

இடது பக்க திரையில் வரும் ரோகிணி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய மகன் வினோத் கிஷன் மாற்றுத்திறனாளி. மகனை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வேலைக்கு செல்கிறார்.

வலது பக்க திரையில் மூன்று கயவர்களால் கடத்தப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்படும் கவுரி அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடுகிறார்.

ஒரு பழைய செல்போன் கவுரி கையில் கிடைக்கிறது. அதன் மூலம் உதவி கேட்க பல எண்களை தொடர்பு கொள்கிறார். அப்போது வினோத் கிஷன் எண்ணுக்கு தொடர்பு கிடைக்கிறது.

மாற்றுத்திறனாளியான வினோத் கிஷனால் கவுரிக்கு உதவ முடிந்ததா, கவுரி கடத்தப்பட்டதன் பின்னணி என்ன? போன்ற முடிச்சுகளை அவிழ்க்கிறது படத்தின் மீதி கதை

சிறிய வேடங்களில் நடித்து வந்த வினோத் கிஷனுக்கு முக்கிய வேடம். மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் தனது மொத்த திறமையையும் மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.

குழந்தைத்தனமாக பேசுவது, உடல் அசைவுகள் என எல்லாவிதத்திலும் கேரக்டருக்கு சிறப்பு செய்திருக்கிறார். கிடைக்கும் வாய்ப்பில் சிரிக்கவும் வைக்கிறார்.

கவுரிக்கு ரூமுக்குள் முடங்கி கிடக்கும் ரோல். நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டாலும் பதறி துடித்து பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார். கிளைமாக்ஸில் அதிர வைக்கிறார்.

பாசமான தாயாக வந்து போகிறார் ரோகிணி. சச்சின், லகுபரன், சுருளி, மகேந்திரன், பாலா ஆகியோரும் உள்ளனர்

இரண்டு கதைகளுக்கும் பொருந்துகிற மாதிரி சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை விறுவிறுப்புக்கு உதவுகிறது.

ஒரே இடம், ஒரே மனிதர்கள் என திரும்ப திரும்ப காட்சிகள் வந்தாலும் வீரக்குமாரின் ஒளிப்பதிவு திருப்தியளிக்கிறது.

சராசரி மனிதர்களே புரிய சிரமப்படும் சில விஷயங்களை வினோத் கிஷன் புரிந்து கொள்வதில் லாஜிக் இடிக்கிறது.

வழக்கமான பாணியிலிருந்து விலகி பிளவு திரையில் இரண்டு கதைகளை போரடிக்காமல் சொல்லிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குனர் ஜெகன் விஜயா.

Tags:    

மேலும் செய்திகள்