எலக்ட்ரிக்கல் கடை நடத்துகிறார் விமல். இவருக்கும், ஜமீன்தார் நரேனுக்கும் பகை. விமல் கனவில் வரும் சாட்டைக்காரர் சொல்வதெல்லாம் பலிக்கிறது.
தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்கிறார் விமல். அப்போது கனவில் சாட்டைக்காரர் வந்து உன் தங்கை கணவர் திருமணம் முடிந்த இரண்டு நாளில் இறந்து விடுவார் என்று குறி சொல்கிறார்.
இதனால் பதறும் விமல் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார். அதையும் மீறி திருமணம் நடந்து விடுகிறது. விமலால் தங்கை கணவரை காப்பாற்ற முடிந்ததா, எதிரி நரேன் தொல்லைகளை எப்படி சமாளிக்கிறார்? என்பது மீதி கதை.
விமலுக்கு பழக்கப்பட்ட ரோல் என்பதால் அனாயசமாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய அனுபவத்தையும், உழைப்பையும் கொட்டி நடித்திருக்கும் விமல் மீண்டும் தன்னை பட்ஜெட் பட நாயகனாக நிரூபணம் செய்திருக்கிறார். தங்கை கணவருக்காக பாத்ரூம் கிளீன் பண்ணுவது, பேன் சுவிட்ச் போடுவது என அவர் பண்ணும் ஒவ்வொரு அலப்பறையிலும் தியேட்டரில் சிரிப்பு சத்தத்தை கேட்க முடிகிறது.
கண்களால் ஆளை அசத்தும் அழகியாக வரும் நாயகி நேகாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் மனதில் தங்குகிறார். பாலசரவணன், தீபா ஆகியோர் நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளனர். பாண்டியராஜன் அப்பா கதாபாத்திரத்துக்கு அழகு சேர்த்திருக்கிறார்.
தங்கையாக வரும் அனிதா சம்பத் திருமணம் நடக்காதபோது கண்களில் சோகத்தையும், திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தும் நடிப்பில் வித்தியாசத்தை காண்பித்துள்ளார். ஜமீனாக வரும் 'ஆடுகளம்' நரேன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பண்ணும் காமெடி சேட்டை அமர்க்களம்.
மாப்பிள்ளையாக வரும் வத்சன் வீரமணி யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார்.
சாட்டைக்காரராக வரும் வேல ராமமூர்த்தியின் கம்பீர பார்வையும், கணீர் குரலும் நன்று. சில காட்சிகளில் நாடகத்தனம் தெரிவது பலகீனம்.
கிராமத்து அழகை கண்களை குளுமையாக்கும் விதமாக அற்புதமாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கேமில் அலெக்ஸ். காட்வின் இசையில் பாடல்களும், அஸீஸ் பின்னணி இசையும் கதையை தொந்தரவு செய்யாமல் உதவி செய்துள்ளது.
சாதாரண கதையை ரசிக்கும்படியாகவும், சிரிக்கும்படியாகவும் எடுத்துள்ளார் இயக்குனர் மார்ட்டின் நிர்மல்குமார்.