சினிமா விமர்சனம்: 3.6.9

Update: 2023-08-20 06:07 GMT

81 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட உலக சாதனை படம்.

தேவாலயத்தில் மக்களின் அன்பை பெற்ற பாதிரியாராக பாக்யராஜ் இருக்கிறார். ஒருகட்டத்தில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டிருக்கும்போது, துப்பாக்கி ஏந்திய கும்பல் திடீரென உள்ளே நுழைகிறார்கள்.

பாதிரியாரை மிரட்டுவதுடன், சிலரை சுட்டும் கொல்கிறார்கள். அவர்கள் எதற்காக தேவாலயத்துக்குள் நுழைந்தனர்? பாதிரியார் பாக்யராஜை எதற்காக மிரட்டுகிறார்கள்? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பது பரபரப்பு நிறைந்த மீதி கதை.

பாதிரியாராக வரும் பாக்யராஜ், தனது அனுபவ நடிப்பால் அசத்துகிறார். மக்களுக்கு ஆசி வழங்கும்போது அன்பு, மக்களை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சிகளில் வேகம், பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படும்போது துயரம் என முகத்தில் பல்வேறு பரிமாணங்களை காட்டி 'சபாஷ்' சொல்ல வைக்கிறார். அவரது இன்னொரு முகம் எதிர்பாராதது.

வில்லனாக பி.ஜி.எஸ். மிரட்டுகிறார். துப்பாக்கி சகிதமாக அவர் பேசும் ஸ்டைலிஷ் ஆங்கிலம் ரசிக்க வைக்கிறது. ஒரே வசனத்தை அடிக்கடி பேசுவதை தவிர்த்திருக்கலாம்.

பிளாக் பாண்டி, அங்கயற் கண்ணன், ஆலம் ஷா, நரேஷ், சோகைல், ராஜஸ்ரீீ, சக்திவேல், சுபிக்ஷா, கார்த்திக், பிரவீன், ரிஷி ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு, உலகை எப்படி அடுத்துக்கட்டத்துக்கு எடுத்து செல்ல போகிறது? என்பதை கதைக்களமாக வைத்து துப்பாக்கி, கொலைகள் என்று கதை நகர்கிறது.

கார்த்திக் ஹர்ஷாவின் பின்னணி இசை கேட்கும் ரகம். மாரீஸ்வரன் மோகன் குமாரின் ஒளிப்பதிவு பலம்.

சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது போன்ற பலகீனங்கள் இருந்தாலும், 24 கேமராக்கள் கொண்டு வெறும் 81 நிமிடங்களிலேயே எதிர்கால அறிவியல் வளர்ச்சியை திரைக்கதையாக வடிவமைத்து, படத்தை இயக்கியுள்ள சிவ மாதவ் பாராட்டுக்குரியவர்.

Tags:    

மேலும் செய்திகள்