வினய் டாக்டர். அவரது மனைவி நயன்தாரா. இவர்களது மகள் அனியா நபீசா. நயன்தாராவின் தந்தை சத்யராஜ். மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்க்கை நகரும்போது நகரில் கொரோனா தொற்று பரவி ஊரடங்கு போடுகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வினய் நோய் தாக்கி இறந்து போகிறார். இதனால் குடும்பம் இடிந்து போகிறது.
நயன்தாராவும், மகளும் மட்டும் வீட்டில் இருக்கிறார்கள். அப்போது மீடியேட்டர் உதவியோடு அனியா தந்தை ஆவியுடன் பேச முயற்சிக்கிறார். இறந்த தந்தையின் ஆன்மாவுடன் அவரால் பேச முடிந்ததா? அல்லது விபரீதம் ஏதேனும் நிகழ்ந்ததா? என்பதை திக் திக் திரைக்கதையில் சொல்லியுள்ளனர்.
கதையில் நாயகன், நாயகி எல்லாமே நயன்தாரா தான். கணவனை இழந்த துக்கம், மகளின் நிலையை பார்த்து பரிதவிக்கும் துடிப்பு, தோழியிடம் மனம் விட்டு பேசும் யதார்த்தம் என சகல இடங்களிலும் சிறந்த நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு கிரீடம் சூட்டுகிறார்.
தேகம் சற்று மெலிந்த நிலையில் இருந்தாலும் நயன்தாராவின் அந்த வசீகரமான தோற்றம் ரசிகர்களை திரையோடு கட்டி போடுகிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பு ராட்சசியாக விஸ்வரூபம் எடுக்கிறார்.
அப்பாவாக வரும் சத்யராஜ் தனது அனுபவ நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். மகளுக்காக, பேத்திக்காக துடியாய் துடிக்கும் காட்சிகளில் அவரும் அழுது, ரசிகர்களையும் அழவைத்து விடுகிறார்.
மகளாக வரும் அனியா நபீசா நல்ல தேர்வு. வினய் சிறிது நேரமே வந்தாலும் கேரக்டருக்கு குந்தகம் இல்லாமல் வலுவாக நிற்கிறார். பாதிரியாராக வரும் அனுபம் கேர் கதையை முடித்து வைக்கும் கனமான வேலைக்கு கச்சிதமான தேர்வு.
தோழியாக வரும் லிஸி, மீடியமாக வரும் மேகா ராஜன், தெரபிஸ்ட்டாக வரும் பிரவீனா நண்டு உட்பட குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் தொய்வு இல்லாமல் யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி, இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகர் இருவரும் போட்டி போட்டு வேலை செய்துள்ளனர். ஒரு காட்சியில் ஒளிப்பதிவாளர் மிரட்ட, அடுத்த காட்சியில் இசையமைப்பாளர் தியேட்டரையே இசையால் மிரள வைக்கிறார்.
பெரும்பகுதி கதையை வீட்டுக்குள்ளேயேயும், இருட்டிலும் காட்சிப்படுத்தி இருப்பது குறை.
மற்றபடி சஸ்பென்ஸ் படத்துக்குரிய விறுவிறுப்போடு கதை நகர்வது பலம்.
ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்தபடியே மக்கள் வாழ்க்கையை எப்படி சமாளித்தார்கள், எப்படி தவிப்போடு இருந்தார்கள் என்பதை திகில் கலந்து சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன்.