அயோத்தி: சினிமா விமர்சனம்

Update: 2023-03-05 04:19 GMT

அயோத்தியில் வசிக்கும் யாஷ்பால் ஷர்மா தனது மனைவி அஞ்சு அஸ்ராணி, மகள் பிரித்தி மற்றும் மகனுடன் புனித யாத்திரையாக தீபாவளியன்று ராமேஸ்வரம் வருகிறார். அப்போது ஒரு விபத்து நிகழ்ந்து மனைவி இறக்கிறார். அவரது உடலை அயோத்தி கொண்டு செல்ல குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர்.

பண்டிகை என்பதால் நடைமுறைகளை விரைவாக முடித்து அயோத்திக்கு அனுப்புவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சசிகுமார் அந்த குடும்பத்தினருக்கு மனிதாபிமானத்தோடு உதவ முன்வருவதும் இதனால் வரும் சிக்கல்களும் அதை எதிர்கொண்டு ஜெயித்தாரா என்பதும் மீதி கதை..

வழக்கம்போல் பிறருக்கு உதவி செய்பவராக வருகிறார் சசிகுமார். ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தம் மீறாத இயல்பான நடிப்பை அழுத்தமாக வெளிப்படுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக பணம் புரட்டுவது, போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலங்கள் என்று ஏறி இறங்குவது, விமானத்தில் செல்ல டிக்கெட் கேட்டு சக பயணிகளிடம் கெஞ்சுவது என்று மனிதாபிமானத்தின் சின்னமாக மனதில் ஆழமாக இறங்குகிறார்.

கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் பிருத்தி அஸ்ராணி. தந்தை கோபத்தை பார்த்து அஞ்சுவதில் இருந்து கடைசியில் அவருக்கு எதிராக கொந்தளிப்பது வரை உணர்வுகளை உயிரோட்டமாக கொட்டி நடித்து இருக்கிறார்.

கண்டிப்பான அப்பா வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் யஷ்பல் சர்மா. மனைவியை கொடுமைப்படுத்துவதில் இருந்து அவரை நினைத்து உடைந்து அழுவதுவரை நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

புகழ் தன் பங்கை நன்றாகவே செய்துள்ளார்.

அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள அழகை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் மனதை வருடிச் செல்கிறது.

சில காட்சிகளில் நாடகத்தனம் தெரிகிறது. விமான நிலைய காட்சிகளிலும் லாஜிக் மீறல், இதையெல்லாம் பரபரப்பான திரைக்கதை மறக்கடிக்க செய்கிறது.

எளிமையான கதையை கையில் எடுத்து குடும்பம், சென்டிமென்ட், மனிதநேயம், மத நல்லிணக்கம் என ஜனரஞ்சகமான படத்தை ஜீவன் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் மந்திரமூர்த்தி.

Tags:    

மேலும் செய்திகள்