இந்தியா சுதந்திரம் அறிவிக்கப்படும் சில நாட்களுக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது. மலைப்பகுதியில் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்கும் செங்காடு கிராமத்தில் பருத்தி வளம் நிறைந்து உள்ளது. அங்குள்ள மக்களை ஆங்கிலேய அதிகாரி அடிமைகளாக வைத்து சித்ரவதை செய்து பருத்தி எடுக்க வைக்கிறார்.
அந்த அதிகாரியின் மகன் கிராமத்தில் உள்ள இளம் பெண்களை இழுத்து சென்று படுக்கையில் நாசம் செய்கிறான். அங்குள்ள ஜமீன்தார் தனது மகள் ரேவதியை இறந்து போனதாக பொய் சொல்லி ஆங்கிலேயரின் மகன் கண்ணில் படாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கிறார்.
அதே கிராமத்தில் வசிக்கும் கவுதம் கார்த்திக் ஜமீன்தார் மகளை ஒருதலையாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜமீன்தார் மகளை கண்டுபிடித்து விடும் ஆங்கிலேய அதிகாரியின் மகன் அடைய துடிக்கிறான்.
ரேவதியை கவுதம் கார்த்திக் காப்பாற்ற களம் இறங்குகிறார். ஆங்கிலேயர்களை அவரால் எதிர்த்து வெல்ல முடிந்ததா? கிராம மக்கள் நிலைமை என்ன ஆனது என்பது மீது கதை.
தன் அப்பா கார்த்திக்குக்கு கிடைக்காத அரிய வேடம் கவுதம் கார்த்திக்குக்கு கிடைத்துள்ளது. அதில் ஜூனியர் நவரச நாயகனாக எல்லா வகையிலும் யதார்த்த நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தி கடந்து செல்கிறார்.
ரேவதி மீதான காதலில் பொங்கி வழிவதும், காதல் கை கூடாத போது ஏங்கி தவிப்பதும், அடிமைத்தனத்தை எதிர்த்து குரல் கொடுப்பதும் என படம் முழுவதும் புகுந்து விளையாடி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதககளம் பண்ணுகிறார்.
கதாநாயகி ரேவதி அம்சமாக இருக்கிறார். அப்பாவி முகம், வெகுளித்தனம், குறும்பு பேச்சு, ஏழைகள் மீது பரிவு என மனதை வசீகரிக்கிறார். காமெடி நடிகர் புகழ் சீரியஸ் வேடத்தில் அற்புதமாக நடித்து இருக்கிறார்.
பிரிட்டிஷ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் ஆஸ்டின் அவருடைய மகனாக வரும் ஜேசன் ஷா, ஜமீன்தாராக வரும் மதுசூதனராவ், நீலிமா ராணி என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
இரண்டாம் பாதி கதையின் நீளத்தை குறைத்து இருக்கலாம். பாடல்களிலும், பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார் சான் ரோல்டன்.
அற்புதமான லைட்டிங், கேமரா கோணங்கள் மூலம் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.
முதல் படத்திலேயே மிக ஆழமான ஒரு கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் பொன் குமார். ஆங்கிலேயர்கள் நம் மனதில் ஊட்டிய பயம் எப்படி தொடர்கிறது என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார். குடும்பத்துடன் பார்க்கும் ஒரு படத்தை கொடுத்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.