அங்காரகன்: சினிமா விமர்சனம்

Update: 2023-09-13 03:06 GMT

ஆங்கிலேயர்கள் வனப்பகுதியில் அப்பாவி மக்களை அழித்து அந்த கிராமத்தை கையகப்படுத்துகின்றனர். சுதந்திரத்துக்கு பிறகு ஆங்கிலேய ராணி வாழ்ந்த பங்களாவை ஒரு குடும்பம் ரிசார்ட்டாக மாற்றுகிறது.

அந்த ரிசார்ட்டுக்கு ஸ்ரீபதி தன் மனைவியுடன் பிக்னிக் வருகிறார். அதே ரிசார்ட்டுக்கு மேலும் சில தம்பதியரும் வருகிறார்கள். ஒரு நாள் இளைஞர்கள் கூட்டம் விருந்து நிகழ்ச்சி நடத்துகிறது. அப்போது அவர்களுக்குள் மோதல் கைகலப்பு ஏற்படுகிறது.

சில பெண்கள் காணாமல் போகிறார்கள். அதற்கு அமானுஷ்ய சக்திகள்தான் காரணம் என்று நம்புகிறார்கள். இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரி சத்யராஜ் ரிசார்ட்டுக்கு வருகிறார்.

காணாமல்போன பெண்களின் நிலை என்ன? அமானுஷ்ய சக்திகளுக்கும் ரிசார்ட்டுக்குமிடையே என்ன தொடர்பு ? உட்பட பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதி படம்.

காதல் திருமணம் செய்த இளம் கணவன் கதாபாத்திரத்துக்கு ஸ்ரீபதி ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். எந்நேரமும் குடித்து கலாட்டா செய்யும் நபராக, மனைவி மீது சந்தேகப்படும் கணவராக என முடிந்தளவுக்கு உடல்மொழி மூலம் கதாபாத்திரத்தை வேறுபடுத்தி காண்பித்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ் வழக்கமான நக்கல், நையாண்டி என தன்னுடைய டிரேட் மார்க்கில் சிறிதும் குறை வைக்காமல் கேரக்டருக்கு அழுத்தம் கொடுத்து நடித்துள்ளார். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியில் சத்யராஜ் பற்றி தெரியவரும் உண்மை அடேங்கப்பா ரகம்.

நாயகி நியா கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அங்காடி தெரு மகேஷ், அப்புக்குட்டி போன்றவர்கள் கதை எப்படி போகிறதோ அப்படியே நகர்ந்து நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர்.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்வது பலகீனம்.

இசையமைப்பாளர் கார்த்திக் ஹாரர் படத்துக்குரிய இசையை கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களை பயமுறுத்தும் முயற்சியில் வெற்றி காண்கிறார் இயக்குனர் மோகன் டச்சு. படத்துக்கு ஒளிப்பதிவும் அவரே செய்துள்ளார். இருட்டிலும் மலைபிரதேசத்தின் அழகை அப்படியே கடத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்