அநீதி : சினிமா விமர்சனம்

உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களின் வலியைக் கூற முயற்சி செய்து எடுத்திருக்கும் படம்.

Update: 2023-07-24 06:59 GMT

 உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் அர்ஜுன்தாஸ், வீட்டு வேலை செய்யும் துஷாரா விஜயனை சந்தித்து காதல் வயப்படுகிறார் -துஷாரா வேலை செய்யும் வீட்டு முதலாளி அம்மா திடீரென இறந்து போகிறார். இந்தியாவுக்கு வரும் முதலாளி அம்மாவின் பிள்ளைகள் தங்கள் அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளிக்கின்றனர். அவர்களால் துஷாராவின் உயிருக்கு ஆபத்தும் வருகிறது. முதலாளி அம்மா எப்படி இறந்தார்? காதலியை ஆபத்திலிருந்து அர்ஜுன்தாஸ் காப்பாற்றினாரா? என்பது மீதி கதை.

விரக்தி, அவமானம், வறுமை, உறவுகள் இல்லாத ஏக்கம் என நவரசத்தைக் கொட்டியுள்ள அர்ஜுன் தாஸ் நடிப்பு வியக்க வைக்கிறது. யாரைப் பார்த்தாலும் அடிக்கணும் போலத் தோணுது என்று அவர் பேசும் வசனத்தை ஒடுக்கப்பட்டவர்களின் இயலாமை மற்றும் அவர்களின் மனதின் குரலாக பார்க்க தோன்றுகிறது.

துஷாரா விஜயன் வேலைக்காரப் பெண்ணாகவே மாறி மிரள வைக்கிறார். காதலனிடம் அன்புக்காக ஏங்குவது, குடும்பத்தினரிடம் வைக்கும் கண்மூடித்தனமான பாசம், முதலாளி அம்மா சந்தேகப்படும்போது சீறுவது என எல்லாமே அபாரம்.

முதலாளியாக வரும் சாந்தா தனஞ்செயன் பணக்காரர்களிடம் வெளிப்படும் குணத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறார். அவரது மகளாக வரும் வனிதா விஜயகுமார் தடாலடியாக நடித்து மிரட்டியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கடை முதலாளியாக வரும் டி.சிவா ஆகியோர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்துள்ளனர்.பரணி, ஷாரா, அறந்தாங்கி நிஷா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடிப்பும் சிறப்பு

காளிவெங்கட், தான் வந்துப் போகும் சில நிமிடங்களில் தடம் பதிக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை வாழ்ந்துப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது,

கதை மாந்தர்களின் உணர்வுகளையும், எண்ணங்களின் பிரதிபலிப்பையும் மிக அழகாக இசை வழியாக கடத்தி உள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

கதை ஒரு புள்ளியில் ஆரம்பித்து பல இடங்களுக்கு மாறி மாறி பயணப்படுவது படத்தின் பலகீனம்.

சமூக ஏற்றத்தாழ்வு, உழைக்கும் வர்க்கத்துக்கு எதிராக நடக்கும் அநீதி என நேர்மையாக கதைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். தன்னுடைய பாணியில் அழுத்தமான படைப்பை கொடுத்து மீண்டும் தன் பலத்தை நிரூபித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்