பழி வாங்கும் ஆவி - படம் அருவம் விமர்சனம்

சித்தார்த், உணவு கலப்பட தடுப்பு துறை அதிகாரி. படம் அருவம் சினிமா படத்தின் விமர்சனம்.;

Update: 2019-10-17 16:34 GMT
கதையின் கரு:  உணவில் கலப்படம் செய்த ஓட்டல், மருந்தில் கலப்படம் செய்த நிறுவனம் உள்பட பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் கலப்படம் செய்கிற கடைகளை இழுத்து மூடி, ‘சீல்’ வைக்கிறார். இதனால், அந்த கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களின் பகையை சம்பாதிக்கிறார்.

அவர்கள் எச்சரித்தும் பயப்படாமல், சித்தார்த் துணிச்சலுடன் செயல்படுகிறார். இந்த நிலையில் அவருக்கும், கேத்தரின் தெரசாவுக்கும் காதல் வருகிறது. கலப்பட தொழில் செய்யும் இடங்களுக்கே சித்தார்த் நேரில் சென்று, எப்படி கலப்படம் செய்கிறார்கள்? என்பதை படம் பிடித்து, ஆதாரத்துடன் உயர் அதிகாரியை சந்திக்கிறார்.

அப்போது, கலப்பட தொழில் செய்பவர்களுடன் உயர் அதிகாரிக்கு தொடர்பு இருப்பது சித்தார்த்துக்கு தெரியவருகிறது. ஆதாரங்களை உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க மறுக்கிறார். அதைத் தொடர்ந்து கலப்பட கும்பல் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து சித்தார்த்தை தாக்குகிறார்கள். அங்கிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தப்புகிற சித்தார்த், ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தன் உயிரை விடுகிறார்.

அவருடைய ஆவி, காதலி கேத்தரின் தெரசா உடம்புக்குள் புகுந்து, கலப்பட கும்பலை எப்படி பழிவாங்குகிறது? என்பது மீதி கதை.

சித்தார்த்துக்கு கேத்தரின் தெரசாவுடன் காதல், கலப்படம் செய்யும் கும்பலுடன் மோதல், ஆவியாக வந்து மிரட்டல் என நிறைய வேலைகள் இருக்கிறது. அத்தனையையும் கச்சிதமாக செய்து முடிக்கிறார். கலப்பட கடைகளுக்கும், ஆலைகளுக்கும் ‘சீல்’ வைக்கும்போது, அவருடைய துணிச்சல் வியக்க வைக்கிறது.

அவரை கலப்பட கும்பல் அனைவரும் சேர்ந்து தாக்குகிற காட்சியிலும், ஆவியாக வந்து பழிவாங்குகிற சீனிலும் பார்வையாளர்கள், “அய்யோ பாவம்” என்கிறார்கள்.

கேத்தரின் தெரசா, அழகான டீச்சர். அவருக்குள் சித்தார்த்தின் ஆவி புகும் காட்சிகளில், மிரள வைக்கிறார். கபீர்சிங், மதுசூதன் உள்பட 4 வில்லன்களும் மிரட்டுகிறார்கள். சதீஷ், நரேன், மனோபாலா ஆகியோரும் இருக்கிறார்கள். பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை.

பின்னணி இசையில் தமன் திறமை காட்டியிருக்கிறார். அதிகாலை காட்சிகளையும், இரவு நேர காட்சிகளையும் படம் பிடித்த விதத்தில், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் உழைப்பு தெரிகிறது. டைரக்டர் சாய் சேகர் கதை சொன்ன விதம், பாராட்டுக்குரியது. ‘கிளைமாக்ஸ்,’ நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

மேலும் செய்திகள்