4 மாதங்களுக்கு முன்பு இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேதபரிசோதனை

கோவையில் மனைவியின் புகாரின் பேரில் 4 மாதங்களுக்கு முன்பு இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது

Update: 2023-06-14 18:45 GMT

வடவள்ளி

கோவையில் மனைவியின் புகாரின் பேரில் 4 மாதங்களுக்கு முன்பு இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

கோவை வடவள்ளி அருகே உள்ள சத்யாகாலனி யை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 35). இவர் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிளில் வட வள்ளி-சிறுவாணி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது உறவி னர்கள் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தேவராஜ் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜனவரி 30-ந்தேதி இறந்தார். பின்னர் அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தேவராஜின் உடலை புதிய குளத்தில் உள்ள சவுரிபாளையம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

மறு பிரேதபரிசோதனை

இந்த நிலையில் தேவராஜின் மனைவி ஜாய்ஸ் என்பவர் தனக்கு தெரி யாமல் தனது கணவரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர். எனவே மீண்டும் தனது கணவர் தேவராஜின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சவுரிபாளையம் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட தேவராஜின் உடல் நேற்று போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

அவரது உடலை கோவை அரசு மருத்துவமனை டாக்டர் ஜெய்சிங் தலைமையிலான டாக்டர்கள் மறு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவரது உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு முன்பு இறந்து, புதைக்கப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்