நடிகைகளின் மகளிர் தின சிந்தனைகள்
மகளிர் தினத்தையொட்டி நடிகைகள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துள்ளனர்.;
நடிகை அனுஷ்கா கூறும்போது, ''ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சிறப்பு தன்மை இருக்கும். ஆண், பெண் சமம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தொழில், உடல் ஆரோக்கியம், அறிவு உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் பெண்கள் சிறந்தவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி யோசிக்காமல் நமக்கு கிடைத்திருக்கும் சிறிய வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்துக் கொண்டே முன்னேற வேண்டும். மகளிர் தினம் என்ற உடனே பெண்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொள்ளாமல் தந்தையாக சகோதரனாக மகனாக சிநேகிதனாக கணவனாக இப்படி எத்தனையோ விதங்களாக பெண்களுக்கு அன்பை பகிர்ந்து கொடுத்து பிரத்தியேகமாக பார்த்துக் கொள்ளும் ஆண்களுக்கு கூட நன்றி சொல்வோம்'' என்றார்
நடிகை சுருதிஹாசன் கூறும்போது, "இதற்கு முன்புபோல் அல்லாமல் இன்றைய தலைமுறையில் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் முன்னேறிக் கொண்டிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் இப்போதும் கூட பெண்கள் தங்களின் கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்துவதற்கு கொஞ்சம் பயப்படுகிறார்கள். சில சிக்கலான விஷயங்களை தெளிவாக சொல்ல முடியாமல் போனால் ஜாலியாக சிரித்துக்கொண்டே வெளிப்படுத்தி விடுங்கள். மற்றொரு புறம் உலக அளவில் பெண்கள் மீது நடைபெறும் விரும்பத்தகாத சில சம்பவங்களை பார்க்கும்போது சமூகம் இன்னும் விழித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என்று தோன்றுகிறது. பெண்கள் மேலும் சக்தி வாய்ந்தவர்களாக தைரியமாக முன்னுக்கு செல்ல வேண்டும்'' என்றார்.