சினிமாவை விட்டு விலகியது ஏன்? - நடிகை மாளவிகா விளக்கம்
சிறு வயதிலேயே சினிமா மீது ஆர்வம் இருந்தது என்று நடிகை மாளவிகா கூறினார்.;
தமிழில் 1999-ல் வெளியான 'உன்னைத்தேடி' படத்தில் அஜித் ஜோடியாக நடித்து அறிமுகமான மாளவிகா, தொடர்ந்து ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு, பாச கிளிகள், திருட்டுப் பயலே, வியாபாரி, திருமகன், சபரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் மாளவிகா ஆடிய நடனம் பிரபலம். 2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பின்னர் சினிமாவை விட்டு விலகினார்.
இந்த நிலையில் சினிமாவை விட்டு விலகியது ஏன்? என்பது குறித்து நடிகை மாளவிகா கூறியதாவது:-
எனக்கு சிறு வயதிலேயே சினிமா மீது ஆர்வம் இருந்தது. இதனால் மாடலிங்கில் சேர்ந்தேன். விளம்பர படங்களிலும் நடித்தேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. திருமணத்துக்கு பிறகும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன்.
ஆனால் கர்ப்பமானதால் சினிமாவில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஏற்கனவே பல படங்களுக்கு வாங்கி இருந்த சம்பள முன் பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டேன். அதன்பிறகு என்னால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் சினிமாவை விட்டு விலகும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.