'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு எப்போது? - வெளியான தகவல்
நடிகர் விஜய்யின் 69-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோட் படப்பிடிப்பின்போது, அவர் அரசியலுக்கு வருவதையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.அரசியல் அறிவிப்புடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பதையும் விஜய் அறிவித்திருந்தார்.
நடிகர் விஜய்,69வது படத்துடன் சினிமாவிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹெச்.வினோத், "இந்தப்படம் 200 சதவிகிதம் விஜய் படமாக இருக்கும். இந்தப்படம் அரசியல் படமில்லை. முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்.இந்தப்படத்தை ஒப்புக்கொள்ளும்போதே விஜய் சாரை அனைத்துவிதமான அரசியல் தலைவர்களும் அனைத்து விதமான வயதினரும் பார்ப்பார்கள் என்பதால், இதில் யாரையும் தாக்காமல் மேலோட்டமான விஷயங்களை வைத்து ஒரு நல்ல கமர்ஷியல் படமாக திட்டமிடப்பட்டுள்ளது." எனக் கூறியிருந்தார்.
மேலும், இப்படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அல்லது ஹைதராபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.விஜய்யின் கடைசி படம் என்பதால் இதன்மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.