"ஜெயிலர் 2" படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால்?
நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;
சென்னை,
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் 'ஜெயிலர் 2' படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோரின் கேமியோக்கள், ஜெயிலர் திரைப்படத்தை கூடுதல் ஸ்பெஷலாக மாற்றியது. எனவே 'ஜெயிலர் 2' திரைப்படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக சமீபகாலமாக பல தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய மோகன்லால், 'ஜெயிலர் 2' படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, "நிறைய தமிழ் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் எம்புரான் போன்ற படங்களில் பிஸியாக இருந்ததால் அது நடக்கவில்லை. இப்பொழுது 'ஜெயிலர் 2' ஆரம்பித்துவிட்டது. அவர்கள் என்னை அழைத்தால் நான் போவேன்" என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 'ஜெயிலர் 2' படத்தில் தான் நடிப்பதை மோகன்லால் மறைமுகமாக உறுதி செய்துள்ளார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விரைவில் ரஜினி இப்படத்தில் இணைவார் என்றும் மற்ற நடிகர்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.