நமக்கான வாய்ப்புகளை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் - நடிகர் கருணாஸ்

சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று "போகுமிடம் வெகு தூரம் இல்லை" இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

Update: 2024-05-20 12:28 GMT

நடிகர் கருணாஸ் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர். இவர் ஆரம்பத்தில் நந்தா, வில்லன், பாபா, குத்து போன்ற ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர் பெற்றார். அதேசமயம் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை." அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா இயக்குகிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் பயணம் சம்பந்தமான கதை தான் இந்த படத்தின் மையக்கரு. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் பேசிய கருணாஸ், " இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை.

சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம். நான் ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி," என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்