தர்ஷன் விவகாரம்: தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் - நடிகை ரம்யா

நடிகராக இருந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும், ரசிகர்களை பயன்படுத்தி கொலை செய்யக்கூடாது என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 04:35 GMT

பெங்களூரு,

கன்னட திரைஉலகின் முன்னணி நடிகராக இருக்கும் தர்ஷன், தனது தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக ரேணுகாசாமி என்பவரை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தர்ஷனுக்கு எதிராக நடிகர்-நடிகைகள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை ரம்யா, தனது எக்ஸ் தளத்தில், ரேணுகாசாமியை கொலை செய்த நடிகர் தர்ஷன் உள்ளிட்ட கைதானவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பெங்களூருவில் நடிகை ரம்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஒரு நடிகராக தனது பொறுப்பை உணர்ந்து, இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும். நடிகர் தர்ஷன் தனது ரசிகர்களை பயன்படுத்தி கொலை செய்துள்ளார். இது சரியா?. இதுபோன்று கொலை செய்த ஒரு நடிகருக்கு ஆதரவாக நாம் செயல்பட்டால், இந்த சமுதாயத்திற்கு கொடுக்கும் கருத்து என்னவாக இருக்கும். இந்த நாட்டில் சட்டத்தை விட யாரும் பெரியவர் இல்லை.

ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். போலீசார் மீது நம்பிக்கை உள்ளது. பொது வாழ்க்கையில் இருக்கும் போது சமூக வலைதளங்களில் நம்மை பின்தொடர்பவர்கள், பிடிக்காதவர்கள் ஏதாவது அவதூறாக கருத்து சொன்னால் அதனை கண்டுகொள்ள கூடாது. அதுபோன்றவர்களை 'பிளாக்' செய்ய வேண்டும்.

என்னை பற்றி தவறாக பேசியவர்கள் குறித்து பல முறை போலீசில் புகார் அளித்துள்ளேன். போலீசார் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதன்பிறகு நான் புகாரை திரும்ப பெற்றிருக்கிறேன். அதுபோல், ரேணுகாசாமி விவகாரத்திலும் நடிகர் தர்ஷன் போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும். நடிகர் தர்ஷனுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த கொலை தொடர்பான ஒரு வீடியோவில் ரேணுகாசாமியை இரும்பு கம்பியால் தாக்குவதை பார்த்தேன். இன்னும் நிறைய வீடியோக்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். எனவே சட்டப்படி விசாரணை நடந்தி தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்